பகவத் கீதை மீது பதவிப்பிரமாணம் எடுத்த அமெரிக்க எம்.பி.,
வாஷிங்டன் : அமெரிக்க பார்லிமென்டில், விர்ஜினியா மாகாணத்தில் இருந்து தேர்வான, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுஹாஷ் சுப்பிரமணியம், 38, ஹிந்துக்களின் புனித நுாலான பகவத் கீதை மீது பதவி பிரமாணம் எடுத்து கொண்டார்.அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். வரும் 20ம் தேதி அந்நாட்டின் அதிபராக அவர் பதவியேற்க உள்ளார். இந்நிலையில், அமெரிக்க பார்லிமென்டில், புதிதாக தேர்வான உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ளும் நிகழ்வு நேற்று நடந்தது. இதில், விர்ஜினியா மாகாணத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுஹாஷ் சுப்பிரமணியம் நேற்று பதவி பிரமாணம் எடுத்து கொண்டார்.அப்போது, ஹிந்துக்களின் புனித நுாலான பகவத் கீதையை வைத்து, அவர் பதவியேற்றுக் கொண்டார். இதற்கு முன் ஹவாய் பகுதியில் இருந்து தேர்வான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துளசி கப்பார்டு, 43, பகவத் கீதை மீது பதவி பிரமாணம் எடுத்து கொண்டார். சுஹாஷ் சுப்பிரமணியம், ஒபாமா அதிபராக இருந்த போது, அவரின் ஆலோசகராக பணியாற்றி உள்ளார். இவரது தந்தை சென்னையையும், தாய் பெங்களூரையும் சேர்ந்தவர்கள்.