சீனாவுடன் நட்பை விரும்புகிறேன்: ஆனால், 155% வரி விதிக்கிறேன் அமெரிக்க அதிபர் புதிய அறிவிப்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க்: சீன தயாரிப்பு பொருட்கள் இறக்குமதிக்கு, நவ., 1-ம் தேதி முதல் 155 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின், டிரம்ப் உலக நாடுகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். விசா கட்டுப்பாடுகள், கூடுதல் வரி விதிப்பு என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து, கூடுதல் வரி விதிப்பையும் அமல்படுத்தினார். இந்தியாவுக்கு, 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், நம் அண்டை நாடான சீனாவுக்கு, 155 சதவீத வரி விதிக்கப் போவதாக டிரம்ப் கூறியிருந்தார். அந்த முடிவை தற்காலிகமாக ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில், சீனா மீது வரி விதிக்கப்படுவது பரிசீலிக்கப்படுமா என்று செய்தியாளர் ஒருவர் டிரம்பிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் அளித்துள்ள பதில்: நான் சீனாவுடன் நட்புறவுடனேயே இருக்க விரும்புகிறேன். ஆனால், வரி விதிப்பில் சீனா எங்களிடம் கடுமையாக நடந்து கொண்டது. சீனாவுடனான வர்த்தகப் போட்டியில், அமெரிக்காவின் நலன்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். ஸ்மார்ட்போன், மின்சார வாகனங்கள், ராணுவ தளவாடங்கள் உற்பத்திக்கு தேவைப்படும் அரியவகை தனிமங்கள் ஏற்றுமதிக்கு, சீன அதிபர் ஷீ ஜின்பிங் கட்டுப்பாடுகள் விதித்துள்ளார். மேலும், இதுபோல் கட்டுப்பாடு விதிக்கும்படி உலக நாடுகளுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார். உலக நாடுகளை தன் பிடியில் வைத்திருக்க விரும்பும் சீனாவை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. எனவே, சீனாவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்களுக்கும் வரும் நவ., 1-ம் தேதி முதல், 155 சதவீத வரி விதிக்கப்படும். வரியை தேசிய பாதுகாப்பு கருவியாகவே கருதுகிறோம். இந்த வரி விதிப்பு அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கையின் ஒரு பகுதியாகும். இவ்வாறு அவர் கூறினார்.