மச்சாடோவுக்கு நோபல் நார்வே துாதரகத்தை மூடுகிறது வெனிசுலா
கராகஸ்:வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், நார்வேயில் உள்ள துாதரகத்தை மூட இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் ஜனநாயகம் மலர தொடர்ந்து போராடிய, அந்நாட்டின் 'இரும்பு பெண்மணி' என்று அழைக்கப்படும் மரியா கொரினா மச்சாடோவுக்கு, 2025ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மச்சாடோ, வெனிசுலாவில் ராணுவ ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி போராடியவர். அமைதிக்கான நோபல் பரிசு, நார்வே தலைநகர் ஓஸ்லோவில் உள்ள நோபல் கமிட்டியால் வழங்கப்படுகிறது. எனவே எதிர்க்கட்சி தலைவர் மச்சாடோவுக்கு நோபல் பரிசு வழங்கியதால், நார்வே மீது வெனிசுலா அரசு கோபம் அடைந்துள்ளது. இதையடுத்து, நார்வே தலைநகர் ஆஸ்லோ மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள துாதரகங்களை மூடுவதாக வெனிசுலா அரசு அறிவித்துள்ளது. ஆப்ரிக்க நாடுகளான புர்கினா பாசோ மற்றும் ஜிம்பாப்வேயில் புதிய துாதரகங்கள் திறக்கப்பட உள்ளதாக தெரிவித்துஉள்ளது.