ஹைதியில் மீண்டும் வன்முறை ஐ.நா., ஹெலிகாப்டர் மீது துப்பாக்கி சூடு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
போர்ட் - அவ் - பிரின்ஸ்: ஹைதியில் அரசுக்கு எதிரான குழுக்களிடையே மீண்டும் வன்முறை வெடித்ததை அடுத்து, ஐ.நா., ஹெலிகாப்டர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் பதற்றம் அதிகரித்துள்ளது. ஆதரவு
கரீபியன் தீவு நாடான ஹைதியில், அந்நாட்டு அதிபராக இருந்த ஜொவனெல் மோய்ஸ், 2021-ல் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, பிரதமராக ஏரியல் ஹென்றி பதவி வகித்தார்.இவர் ராஜினாமா செய்ததை அடுத்து, செயல் பிரதமராக கேரி கோனில் செயல்பட்டு வருகிறார். இந்த ஆட்சிக்கு எதிராக, செரிஸியர் என்பவர் தலைமையிலான குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு படையினர் மீதும், அரசுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீதும் அவர்கள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.குறிப்பாக, கென்ய போலீசாரின் தலைமையில் ஐ.நா., ஆதரவு பணி துவங்கியதை அடுத்து, இங்கு போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இம்மாத துவக்கத்தில் போன்ட் சோண்டே நகரில் ஆயுதம் ஏந்திய நபர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்நிலையில், கடந்த சில தினங்களாக அங்கு மீண்டும் வன்முறை கள் வெடித்துள்ளன. போராட்டக் குழு
அர்காஹே நகரில், கடந்த 23ல் வெடித்த கலவரத்தில் வீடுகள், வாகனங்களை ஆயுதமேந்திய குழுக்கள் தீ வைத்து எரித்தன.இதன் தொடர்ச்சியாக, 15 பயணியர் மற்றும் ஊழியர்களுடன் சென்ற ஐ.நா.,வுக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மீது, போராளிகள் குழுக்கள் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தின. போர்ட் - அவ் - பிரின்ஸ் நகரில் ஹெலிகாப்டர் தரையிறங்கும் நேரத்தில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், யாருக்கும் எந்த ஆபத்தும் நேரவில்லை என, அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக உறுதியான தகவல்கள் எதையும் ஐ.நா., இதுவரை வெளியிடவில்லை.அர்காஹே நகரில், போலீசார் மீது தாக்குதல் நடத்திவிட்டு, போராட்டக் குழுக்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் படகு வாயிலாக நேற்று முன்தினம் தப்ப முயன்றனர். வெடிமருந்துகளுடன் அவர்கள் பயணித்த நிலையில், படகு பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில், 50க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது.