உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / முதல் தேர்வில் டிரம்ப் வெற்றி விவேக் ராமசாமி விலகினார்

முதல் தேர்வில் டிரம்ப் வெற்றி விவேக் ராமசாமி விலகினார்

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பரில் நடக்கிறது. அதற்கான வேட்பாளரை தேர்வு செய்ய ஜனநாயக கட்சியும், குடியரசு கட்சியும் ஒவ்வொரு மாநிலமாக கட்சிக்குள் தேர்தல் நடத்தும். அதிக மாநிலங்களில் வெற்றி பெறுபவர் அதிபர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.'காகஸ்' எனப்படும் இந்த உட்கட்சி தேர்தல் அயோவா மாகாணத்தில் துவங்குவது வழக்கம். அதன்படி அயோவாவில் குடியரசு கட்சியின் காகஸ் நடந்தது. கட்சியின் மாநில நிர்வாகிகள் ஓட்டளித்தனர்.முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு, 51 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. புளோரிடா கவர்னர் ரான் டிசான்டிஸ், 21 சதவீத ஓட்டுகளை பெற்றார். இந்திய வம்சாவளியான நிக்கி ஹாலே, 19 சதவீதம், மற்றொரு இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி 7.7 சதவீதம் ஓட்டுகளை பெற்றனர். குறைந்த ஓட்டுகள் கிடைத்ததால் அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து விலகுவதாக தொழிலதிபர் விவேக் ராமசாமி அறிவித்தார். டொனால்டு டிரம்பை ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.அதிபராக இருந்தபோது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், தன் தொழில்களில் முறைகேடு செய்ததாகவும் டிரம்ப் மீது வழக்குகள் உள்ளன. அதிபர் தேர்தலில் மீண்டும் அவர் போட்டியிட முடியுமா என்ற சர்ச்சையும் நிலவுகிறது. என்றாலும், டிரம்பின் விசுவாசிகள் அவரை கைவிடவில்லை என்பதை அயோவா தேர்தல் வெற்றி காட்டுகிறது. அடுத்த காகஸ் இன்று நியுஹாம்ப்ஷயரில் நடக்கிறது. வழக்குகளில் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டால் தவிர, குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டிரம்ப் தேர்வு செய்யப்படுவது உறுதி என தோன்றுகிறது. ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்