உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 600 ஆண்டுக்கு பின் வெடித்த எரிமலை; ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமா?

600 ஆண்டுக்கு பின் வெடித்த எரிமலை; ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள கிராஷென்னினிகோவ் எரிமலை, 600 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வெடித்துள்ளதாகவும், சமீபத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இது நிகழ்ந்திருக்கலாம் எனவும் அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் கடந்த மாதம் 30ம் தேதி, 8.8 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. இதையொட்டி ஜப்பான், ஹவாய் தீவுகளில் சுனாமி அலைகள் ஏற்பட்டன. இந்நிலையில் ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள கிராஷென்னினிகோவ் எரிமலையில் இருந்து தீப் பிழம்பு நேற்று எழுந்தது. முன்னதாக, இந்த எரிமலையில், 1463ம் ஆண்டு வெடிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கும் விஞ்ஞானிகள், தற்போது 600 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். இதற்கு, சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர். கிராஷென்னினிகோவ் எரிமலை வெடிப்பு காரணமாக, தீப்பிழம்புகளில் இருந்து வெளியேறும் சாம்பல்கள் 19,௦௦௦ அடி உயரத்திற்கு எழுவதால், அவ்வழியாக விமான போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என, விமான சேவைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனினும், அவை பசிபிக் பெருங்கடலை நோக்கி நகர்வதால், அருகே வசிக்கும் மக்களுக்கு ஆபத்து இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுனாமி எச்சரிக்கை

ரஷ்யாவின் கிழக்கு பகுதியான கம்சட்கா தீபகற்பத்தை ஒட்டியுள்ள குரில் தீவுகள் அருகே 7.0 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையை, அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் விடுத்துள்ளது. பெரிய அலைகள் வராவிட்டாலும், கடற்கரை அருகே யாரும் தங்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாக்.,கில் நிலநடுக்கம்

ரஷ்யாவை தொடர்ந்து, நம் அண்டை நாடான பாகிஸ்தானிலும் நேற்று அதிகாலை 4.8 என்ற ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவானது. அங்குள்ள கைபர் பக்துங்க்வா, பஞ்சாப், இஸ்லாமாபாத் உள்ளிட்ட மாகாணங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால், உயிரிழப்போ, சேதமோ ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை