கங்கையில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் பணி; தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி
புதுடில்லி: கங்கையில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் பணி தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டதால் தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்துள்ளது.மஹா சிவராத்திரியை முன்னிட்டு வரும் ஜன.,14ம் தேதி மஹா கும்ப மேளா தொடங்குகிறது. தொடர்ந்து 40 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் உலகம் முழுவதும் இருந்து வரும் கோடிக்கணக்கான பக்தர்கள் கங்கை நதியில் புனித நீராடுவர்.இதனிடையே, கங்கை நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், உத்தரபிரதேச தலைமை செயலாளர் தலைமையில் உயர்மட்ட குழுவை அமைத்து, கங்கை நதியை தூய்மைப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நவ.,23ல் அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால், தற்போது வரையில் அறிக்கை சமர்பிக்கப்படாதது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள பசுமை தீர்ப்பாயம், மஹா கும்பமேளா தொடங்குவதற்கு முன், கங்கை நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் கோடிக்கணக்கான பக்தர்கள் உடல்நலம் பாதிக்கும் அபாயம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், அறிக்கை சமர்ப்பிக்க அரசு தரப்பிலான குழு 15 நாட்கள் அவகாசம் கேட்பதற்கு அதிருப்தியளிப்பதாகவும், அறிக்கை தயார் செய்யப்பட்டு விட்ட நிலையில், தலைமை செயலாளரின் ஒப்புதல் பெறுவதற்கு இந்த அவகாசம் தேவையா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வழக்கு வரும் 9ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது.