உலகின் மிகவும் வயதான குழந்தை 30 ஆண்டுகள் கருவில் இருந்தது
கொலம்பஸ்:அ மெரிக்காவில், மருத்துவ உலகின் அதிசயமாக, 30 ஆண்டுகளாக உறைந்திருந்த கரு முட்டையில் இருந்து ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை உலகின் வயதான குழந்தை என்று கூறுகின்றனர். அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்தவர்கள், லிண்ட்சே, டிம் பியர்ஸ் தம்பதி. கடந்த ஏழு ஆண்டுகளாக இவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில் ஐ.வி.எப்., எனப்படும் செயற்கை கருத்தரித்தல் முறையில் கருத்தரிக்க முடிவு செய்தனர். இதற்காக கருத்தரிப்பு மையத்தை நாடினர். ஐ.வி.எப்., சிகிச்சையில், கரு முட்டைகள் உறைந்த நிலையில் சேமித்து வைக்கப்பட்டு பின்னர் தேவைப்படும்போது கருத்தரிப்புக்கு பயன்படுத்தும் முறையும் உள்ளது. இதற்காக கருமுட்டை அளித்தவர்கள் ஒப்புத லுடன் தானமாக பெறலாம். இந்த வகையில், 62 வயதான ஆர்ச்சட் என்ற பெண் வழங்கியிருந்த கருமுட்டையை தானமாக பெறப்பட்டது. கடந்த, 1994ம் ஆண்டில் அவர் தன் கருமுட்டையை தானமாக வழங்கியிருந்தார். அதன்படி, 11,148 நாட்கள் உறைந்த நிலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அந்தக் கரு முட்டை லிண்ட்சே, டிம் பியர்ஸ் தம்பதிக்கு தானமாக வழங்கப்பட்டது. தற்போது அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது மருத்துவ உலகிலேயே மிகவும் வயதான கருவிலிருந்து பிறந்த குழந்தை என்ற வகையில் புதிய சாதனையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அலபாமா நீதிமன்றம் கடந்தாண்டு அளித்த தீர்ப்பின்படி, உறைந்த நிலையில் வைக்கப்பட்டிருக்கும் கருமுட்டையும், குழந்தையாக வே கருதப்படும். அதன்படி, தற்போது பிறந்துள்ள இந்த குழந்தைக்கு, 31 வயது. அமெரிக்காவில் தற்போது 15 லட்சம் கருமுட்டைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால், 2 சதவீத மக்கள் மட்டுமே ஐ.வி.எப்., முறையை பயன்படுத்துகின்றனர். அதனால், சேமித்து வைத்துள்ள கருமுட்டைகளை என்ன செய்வது என்ற குழப்பமும் உள்ளது.