உள்ளூர் செய்திகள்

பெண்ணின் வேதனைகள் நாட்டிய நடனம்

தில்லி லோதிரோடு ஆந்திரா அசோசியேஷன் வளாகத்தில் நாரிவேதனா" ( பெண்ணின் வேதனைகள்) என்ற தலைப்பில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. கனிகா பட் என்னும் வளரும் இளம்நாட்டிய கலைஞர் இந்த படைப்பை தயாரித்து மேடை ஏற்றி இளவயதினரிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரங்கேற்றியுள்ளார் சிறப்பு விருந்தினர்கள் கதக் நடனகலைஞர்கள் கமலினி மற்றும் நளினி சகோதரிகள், பரத நாட்டிய குரு கனகா சுதாகர் , பேச்சாளர் மீனா வெங்கி ஆகியோர் பாரம்பரிய குத்துவிளக்கேற்றிட நிகழ்ச்சி தொடங்கியது. தலைப்பிற்கேற்ப இராமாயணசீதை, மகாபாரத திரெளபதி இன்றைய பெண்கள் என்று மூன்று யுக பெண்களை எடுத்துக் கொண்டு நடனகோர்வை அமைத்திருந்தார்கள். ஆக திரேதா யுகம் துவாபர யுகம், கலியுகம் என்று யுகங்கள் பல மாறினாலும் பெண்ணின் பிரச்சினை கள் மாறவில்லை இருக்கத்தான் செய்கிறது என்பதே உட்கருத்து. ராமர் வில்லை முறித்து சீதையை கரம் பிடித்து .. பின்னர் கானகம் சென்று சீதையை ராவணன் பற்றியவை விறுவிறுப்பாக கொண்டு சென்றார்கள். இதில் யட்சகான பாணியில் ராவணன் மேடையில் தோன்றியது வித்யாசமாகவும் அழகாகவும் இருந்தது. வழக்கம்போல சீதையின் அசோகவன துன்பங்களை காட்டுவார்கள் என் எதிர்பார்த்த நமக்கு அவளின் அக்னிபிரவேச காட்சிகள் காண கிடைத்தது. இது வித்தியாசமான கோணம். மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. அடுத்து பாஞ்சாலி திருமணம் ஐவருடனான வாழ்க்கை, சூதாட்டம் மானபங்கம் என நமக்கு தெரிந்த கதை. இங்கு துச்சாதனன் ஆக யட்சகான உடையில் அந்த நிகழ்வை உக்கிரமாக காட்டியது சிறப்பு. யட்சகானத்திற்குரிய அதிர்வுகளுடனான ஆட்டம் சிறப்பாக இருந்தது. மூன்றாவதாக இன்றைய பெண்கள் பற்றியது. பணிஇடபிரச்சனை , பேருந்தில் ரயிலில் படும் பிரச்சினை, பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சமுதாய சூழல் என்று காட்டி பெண்கள் வேதனை தொடர்கதை என்ற முற்றுப்புள்ளியுடன் நிறைவு செய்தார்கள். சிறப்பு விருந்தினர்களை கனிகாவின் பெற்றோர்கள் கெளரவித்தனர். அவர்கள் கனிகாவின் முயற்சியை பாராட்டி பேசினார்கள். நிகழ்ச்சியை லாவண்யா தொகுத்து வழங்கிய கனிகா நன்றியுரையுடன் நிறைவுற்றது. - நமது செய்தியாளர் மீனா வெங்கி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !