ஆடிப்பூரம் பண்டிகை
ஆடிப்பூரம் பண்டிகை, பக்தர்களின் ஆன்மிக நம்பிக்கைகளுக்கும், குடும்ப நலன்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. ஆண்டாளின் அவதார தினமானதால் ஆண்டாள் ஜெயந்தியாகவும் கொண்டாடப்படுகிறது எல்லா கோவில்களிலும் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்து வழிபாடு செய்வதை பார்க்கிறோம். தலைநகர் கிழக்கு தில்லியில் சுப சித்தி விநாயகர் கோவிலிலும் காருண்ய மகா கணபதி கோவிலிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுப சித்தி விநாயகர் கோவிலில் காலையில் அம்பாள் லலிதாம்பிகை க்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது.மாலையில் பக்தர்கள் அன்புடன் காணிக்கையாய் அளித்த ஆயிரம் டஜன் வளையல்களால் மூலவர் மற்றும் உற்சவருக்கு அலங்காரம் செய்யப்பட்டது. ஊஞ்சலில் உற்சவர் அமர்ந்த கோலத்தில் கொலுவிருந்தது காணவேண்டிய காட்சி. அன்பர்கள் கிரிஜா ராமநாதன், சரஸ்வதி , ஆனந்தி ஜெயகோபால், சித்ரா மூர்த்தி, விஜி சந்திரசேகர் ஆகியோர் அன்னைக்கு பாட்டுக்கள்பாடி நாதாபிஷேகம் செய்வித்தார்கள்.மற்ற மங்கையர்கள் ஊஞ்சலை சுற்றி கும்மி அடித்து மகிழ்ந்தனர். காருண்ய மகா கணபதி கோவிலில் லலிதா ஹோமம் அபிஷேகம் அன்னை பாலாம்பிகைக்கு காலையில் நடைபெற்றது. அன்னைக்கும் துர்க்கைக்கும் வளையல் அலங்காரம் செய்வித்து மகிழ்ந்தனர். இரண்டு கோவில்களிலும் பெண்கள் பெருமளவு கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆடிப்பூரம், பக்தர்கள் தங்கள் பக்தியையும், விசுவாசத்தையும் வெளிப்படுத்தும் ஒரு சிறப்பான நாளாகும். இந்த நாளில், அனைவரும் ஒன்றுகூடி, அம்மனை வழிபட்டு, தங்கள் வாழ்க்கையில் நலமும், நலனும் பெறுவதற்காக பிரார்த்தனை செய்கின்றனர். ஆடிப்பூரத்தின் சிறப்புகள் மற்றும் அதன் ஆன்மிக முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்த பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். - நமது செய்தியாளர் மீனா வெங்கி