உள்ளூர் செய்திகள்

விகாஸ்புரி ஸ்ரீதேவி மூகாம்பிகை கோவிலில் லகுன்யாச ஏகாதச ருத்ர ஐபம்

புதுதில்லி விகாஸ்புரி சி பிளாக்கில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தேவி மூகாம்பிகை கோவிலில் ஞாயிற்றுக்கிழமை ( நவ-2) லகுன்யாச ஏகாதச ருத்ர ஐபம் நடைபெற்றது. ரித்விக்குகள் பலர் இதில் பங்கேற்று ருத்ர பாராயணம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை, விகாஸ்புரி பிராத்தனா குழுவினர் செய்து இருந்தனர். அதைத் தொடர்ந்து, சங்கல்பம், புண்யாஹவசனம், கலச ஸ்தாபனம், அர்ச்சனை, ஸ்ரீ ருத்ரநாம த்ரிஸதீ நடைபெற்றன. இதையடுத்து, பூஜிக்கப்பட்ட கலசத்தில் இருந்த புனித நீரினை எடுத்து கோவிலில் அமைந்துள்ள கல்யாண கணபதி, ஆதி சங்கரர், தேவி மூகாம்பிகை, சுப்பிரமணியர், அனுமன் மற்றும் வீரபத்ரர் சன்னதிகளில் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருவுருவச் சிலைகள் சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு,பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம் வாசிக்கப்பட்டு, சுப்பிரமணியருக்கு அஷ்டோத்திர சதநாமாவளி அர்ச்சனை செய்யப்பட்டது. இதையடுத்து, லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த தேவி மூகாம்பிகைக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பிரதி மாதம் முதல் வாரத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை தோறும், லகுன்யாச ஏகாதச ருத்ர ஜபம் மற்றும் லலிதா சகஸ்ரநாம பாராயணம் விகாஸ்புரி பிரார்த்தனா குழுவினர் ஏற்பாட்டில் இக்கோவிலில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. - புதுடில்லியிலிருந்து நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !