உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடவள் அரங்கம் / ஆடவள் அரங்கம்: கடமையை கடவுளாக போற்றும் ஆசிரியை சென்னவ்வா ஹிரேமத்!

ஆடவள் அரங்கம்: கடமையை கடவுளாக போற்றும் ஆசிரியை சென்னவ்வா ஹிரேமத்!

- நமது நிருபர் - ஆசிரியர் என்றால் பாடம் கற்றுத்தரும் நபர் அல்ல. சிறார்களுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தி தரும் பொறுப்பும், அவருக்கு உள்ளது. தங்களின் பொறுப்புணர்ந்து பணியாற்றும் ஆசிரியர்களில், சென்னவ்வா வீரபத்ரய்யா ஹிரேமத்தும் ஒருவர். பெலகாவி மாவட்டம், அதானி தாலுகாவில் வசிப்பவர் சென்னவ்வா, 58. இவர் கடந்த 29 ஆண்டுகளாக, ஆசிரியை தொழில் செய்கிறார். அதானியில் இருந்து, 10 கி.மீ., தொலைவில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றுகிறார். தினமும் பஸ்சில் சென்று வருகிறார். இத்தனை ஆண்டுகள் பணி காலத்தில், விடுமுறை எடுத்தது மிகவும் குறைவு. ஆண்டு தோறும் தனக்கு கிடைக்கும், அரசு விடுமுறைகளிலும், மிகவும் அவசியம் என்றால் மட்டுமே, ஒன்று, இரண்டு நாட்கள் விடுமுறையை பயன்படுத்துவார். மற்ற நாட்களில் தவறாமல், பணிக்கு ஆஜராவார். இவருக்கு உயர் பதவிகள் தேடி வந்தும், அதை ஏற்காமல் ஆசிரியையாகவே சிறார்களுடன் இருக்க விரும்பினார். பதவியை விட, சிறார்களின் எதிர்காலமே முக்கியம் என்பது, இவரது எண்ணமாகும். கடந்த, 2010ல் இவரது மகள், உடல் நிலை பாதிப்பால் இறந்தார். அப்போதும் சென்னவ்வா நீண்ட விடுமுறை எடுக்கவில்லை. பள்ளி சிறார்களின் உருவத்தில், தன் மகளை பார்த்து கொண்டு, பணியில் ஈடுபாடு காட்டினார். அவரது வாழ்க்கை முறையும், மிகவும் ஒழுங்கானது. தினமும் அதிகாலை 3:00 மணிக்கு எழுந்து, தன் அன்றாட பணிகளை துவக்குவார். அதானியில் உள்ள நெட்டர மடம், சிவயோகி கஜ்ஜின மடத்துக்கு செல்வார். பூஜைகளில் பங்கேற்பார். வீடு திரும்பி குடும்பத்தினருக்கு, சமைத்து வைத்து விட்டு, வீட்டு வேலைகளை முடித்து கொண்டு, பள்ளிக்கு புறப்படுவார். வீடு, ஆன்மிக சேவை மற்றும் ஆசிரியர் பணி, என, மூன்று கடமைகளையும் தவறாமல் செய்தார். சென்னவ்வாவின் கணவர் தானய்யா, வரி ஆலோசகராக பணியாற்றுகிறார். தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். இருவரும் படித்து பட்டம் பெற்றுள்ளனர். பாடம் நடத்துவது மட்டும், ஆசிரியர்களின் கடமை அல்ல. சிறார்களுக்கு கல்வியில் ஆர்வத்தை ஏற்படுத்துவதும், அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதும், ஆசிரியர்களின் கடமை தான். சென்னவ்வா இந்த கடமையை, செவ்வனே செய்து வருகிறார். தன் தனிப்பட்ட வாழ்க்கையில், பல கஷ்டங்களை சந்தித்தும், ஆசிரியர் பணிக்கு முக்கியத்துவம் அளித்தார். சென்னவ்வாவின் பணியை அடையாளம் கண்டு, 2023ல் அவருக்கு அதானியில், 'சாவித்ரிபாய் புலே' விருது வழங்கப்பட்டது. 2024ம் ஆண்டில் தார்வாடில், நல்லாசிரியை விருது வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்