உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடவள் அரங்கம் / ஒரே நேரத்தில் இரு கைகளிலும் எழுதும் ஆதி ஸ்வரூபா

ஒரே நேரத்தில் இரு கைகளிலும் எழுதும் ஆதி ஸ்வரூபா

பலகையிலோ அல்லது பேப்பரிலோ ஒரு கையில் வேகமாக எழுதவே பலருக்கு வராது. பலர் நேராக எழுதாமல் கோணலாக எழுதி கொண்டு இருப்பர். ஒரு கையிலேயே நேராக எழுத முடியாத போது, ஒரே நேரத்தில் இரு கைககளிலும் எழுதுவது பெரிய விஷயம். ஆனால் 19 வயதே ஆன இளம்பெண் ஒரே நேரத்தில் இரண்டு கைகளிலும் வேகமாக எழுதி அசத்துகிறார்.மங்களூரு டவுன் கொடியால்பைல் பகுதியில் வசிப்பவர் கோபட்கர். இவரது மனைவி சுமங்களா. இந்த தம்பதியின் மகள் ஆதி ஸ்வரூபா, 19. இவர் தான் ஒரே நேரத்தில் இரு கைகளிலும் வேகமாக எழுதுகிறார். இதுகுறித்து ஆதி ஸ்வரூபாவின் தந்தை கோபட்கர் கூறியதாவது:எனது மகளுக்கு இரண்டரை வயதாக இருக்கும் போதே, அவருக்கு புத்தகங்களை காட்டி படிக்க சொல்லி கொடுத்தேன். மூன்றரை வயதில் அவருக்கு வலது கையில் பேனாவை கொடுத்து நானும், மனைவியும் எழுத பயிற்சி அளித்தோம். ஆனால் அவர் இடது கையிலும் பேனா வை எடுத்து கொண்டு ஒரே நேரத்தில் இரண்டு கைககளிலும் எழுத ஆரம்பித்தார். அவருக்குள் ஏதோ திறமை இருப்பதை உணர்ந்து கொண்டு இரு கைகளிலும், ஒரே நேரத்தில் எழுத பயிற்சி கொடுத்தோம். தற்போது 15 நிமிடத்தில் இரு கைகளை பயன்படுத்தி 36 வார்த்தைகளை எழுதி விடுகிறார். இந்த சாதனைக்காக, 2019ல் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பிடித்தார். ஆதி ஸ்வரூபா பள்ளிக்கு சென்றது இல்லை. ஆனால் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பி.யு.சி.,யை தொலை துார கல்வி மூலம் படித்தார். எஸ்.எஸ்.எல்.சி.,யில் 90 சதவீதம்; பி.யு.சி.,யில் 82 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்தார். சிறுவர், சிறுமியரின் திறமைகளை வெளிகொண்டு வரும் வகையில் சிறியதாக ஒரு பயிற்சி மையம் நடத்தி வருகிறோம். இந்த மையத்தை ஆதி ஸ்வரூபா கவனிக்கிறார். தன்னை போன்று மற்றவர்களுக்கும் இரண்டு கைகளில் எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.பயிற்சி மையத்திற்கு வரும் மாணவ, மாணவியருக்கு இரண்டு கைகளில் எழுதுவது உட்பட பல பயிற்சிகளை அளித்து வருகிறார். புகைப்படம் வரைவதிலும் அவருக்கு ஆர்வம் அதிகம். அவர் எதிரில் அமர்ந்து இருப்பவர்களே ஐந்து நிமிடத்தில் வரைந்து கொடுத்து விடுவார். போட்டி நிறைந்த இந்த சமூகத்தில், இளம் தலைமுறையினர் நிறைய திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை