உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடவள் அரங்கம் /  கைவினை பொம்மை தயாரிப்பில் அசத்தும் சென்னை பெண்மணி

 கைவினை பொம்மை தயாரிப்பில் அசத்தும் சென்னை பெண்மணி

- நமது நிருபர் - தமிழகத்தின் சென்னை தி.நகர் பகுதியை சேர்ந்தவர் சித்ரா சங்கர், 57. பெங்களூரின் கே.ஆர்.புரம் பட்டரஹள்ளியில் வசிக்கிறார். இவர் சுற்றுச்சூழலுக்கு உகந்த கைவினை பொம்மைகளை தயாரிக்கிறார். இதுகுறித்து சித்ரா சங்கர் கூறியதாவது: கொரோனா நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருந்த போது, ஏதாவது கைவினை பொருட்கள் செய்ய வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டது. அப்போது தான் இந்திய பொம்மை தயாரிப்பாளர் மையம் பற்றி முகநுால் மூலம் தெரிந்து கொண்டேன். அவர்கள் தயாரிக்கும் கைவினை பொம்மைகளை வீடியோக்கள் மூலம் தெரிந்து கொண்டேன். எனது தோழி கல்யாணி என்பவர், பெரிய வகை கைவினை பொம்மைகளை செய்கிறார். அவரிடம் இருந்து நானும் கைவினை பொம்மைகள் செய்ய கற்று கொண்டேன். துணிகளில் தான் கைவினை பொம்மைகளை தயார் செய்கிறேன். இதற்கு எனது கணவர் சங்கர் உதவியாக உள்ளார். தேவையான பொருட்களை வாங்கி வந்து கொடுக்கிறார். இப்போது சிறிய ரக பொம்மைகள் தான் தயாரிக்கிறேன். நேரம் கிடைக்கும் போது பொம்மைகள் செய்வதால், ஒரு பொம்மையை முழுமையாக வடிவமைக்க ஒரு வாரம் ஆகிறது. ராதா, கிருஷ்ணா, முருகர், சிவன் உள்ளிட்ட பல கடவுள்களின் பொம்மைகளை வடிவமைத்துள்ளேன். சென்னை வி.ஐ.டி.,யில் பேராசிரியராக இருக்கும் சுகந்தன், நாட்டின் பல மாநிலங்களை சேர்ந்த கைவினை பொருட்கள் தயாரிக்கும் கலைஞர்களை ஒருங்கிணைத்து, ஆண்டிற்கு ஒரு முறை கைவினை பொம்மைகள் கண்காட்சி நடத்துகிறார். எங்கள் குழுவில் 57 பேர் உள்ளோம். கருடா மாலில் நேற்று வரை 3 நாட்கள் கண்காட்சி நடத்தினோம். இதில் நான் உட்பட 57 பேரும் தயாரித்த, கைவினை பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டன. ஒவ்வொருவரும் தலா 49 பொம்மைகள் தயாரித்துள்ளோம். 'வொண்டர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்சில்' எங்கள் குழு செய்த சாதனை இடம்பிடித்துள்ளது. கின்னஸ் சாதனைக்கும் முயற்சித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். சித்ராவின் கணவர் சங்கர் தொழிலதிபராக உள்ளார். இவர்களின் மகன் ஸ்கந்தன் பி.யு., 2ம் ஆண்டு படிக்கிறார். பொம்மைகள் வாங்க தொடர்புக்கு: 98860 95030.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை