தங்கப் பதக்கம் வென்ற தங்க தாரகைகள்
பெலகாவி மாட்டத்தில் உள்ளது ராணி சென்னம்மா பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. பட்டம் வாங்குவதற்காக நுாற்றுக்கணக்கிலான மாணவியர் படை எடுத்தனர்.அவர்களில் பலர் கருப்பு தொப்பியும், கவுனும் அணிந்து காட்சி அளித்தனர். இதில், பல சுவாரசிய சம்பவங்கள் அரங்கேறின. ஏழ்மையான குடும்ப பின்னணியில் படித்து தங்கப்பதக்கம் பெற்றவர் ஏராளம்.1. விஜயபுரா மாவட்டம், சரவாத் கிராமத்தை சேர்ந்தவர் ஹீனா சவுகர். இவர் படிப்பறிவில்லாத குடும்பத்தை சேர்ந்தவர். இவரது குடும்பத்தில், முதன் முறையாக, கல்லுாரி படிப்பில் சேர்ந்தார். பொருளாதார ரீதியாக பல சிரமங்களை தாண்டி எம்.பி.ஏ., படித்தார். இதில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை புரிந்து உள்ளார். இதனால், அவருக்கு கிராமத்தில் நற்பெயர்.2. பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர் பஷிரா முகமது யூசுப் மிலாடி. இவருக்கு தந்தை இல்லை; தாய் மட்டுமே. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவருக்கு ஐந்து சகோதரிகள். இவரே, குடும்பத்தில் கடைசி மகள். இருந்தாலும், குடும்பத்தில் முதல் பட்டதாரியாக ஆகி உள்ளார். இவர், பி.காம்., படித்தார். முதல் மதிப்பெண் பெற்று, தங்கப்பதக்கம் வாங்கி அசத்தி உள்ளார். 'ஏழை முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவு கிடைத்தால், எங்களாலும் சாதிக்க முடியும்' என பெருமையுடன் கூறினார்.3. பெலகாவியில் உள்ள ஆர்.எல்.எஸ்., கல்லுாரியில் சிறப்பு ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றுபவர் சுஷ்மிதா ஹல்யாலா. இவர் விரிவுரையாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் போதே, படிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால், 'முனைவர்' பட்டம் பெறும் முயற்சியில் இறங்கி உள்ளார். இதனால், பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு உள்ளார். எம்.ஏ., ஆங்கிலத்தில் முதல் மதிப்பெண் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார்.இப்படி சாதனை பெண்கள் பலரும் பட்டம், பதக்கங்களை தட்டி சென்றனர். வாழ்க்கையில் சோதனையை கடந்தால் தான் சாதனை என்பதை செயலில் காட்டியுள்ளனர். - நமது நிருபர் -