காபி கொட்டையில் இருந்து மாலை செய்யும் ஹாசன் பெண்
கர்நாடகாவின் சிக்கமகளூரு, குடகு, ஹாசன் மாவட்டங்களில் காபி அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. காபி ஏற்றுமதியில் இந்தியாவுக்கு, இந்த மூன்று மாவட்டங்களும் முக்கிய பங்களிப்பு கொடுக்கின்றன. முறை தவறி பெய்யும் மழை, பருவமழையால் காபி செடிகளில் இருந்து காபி கொட்டைகள் விழுந்து வெடிக்கின்றன. இந்த தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு அடியாக விழுகிறது. காபி கொட்டைகள் விழுந்தால், ஒன்றும் செய்ய முடியாது என்று நினைக்கும் நிலையில், காபி கொட்டையில் மாலை செய்து அசத்துகிறார் ஹாசன் பெண். ஹாசனின் ஆலுார் கிட்டகாலே கிராமத்தை சேர்ந்தவர் உதய். காபி சாகுபடி செய்யும் விவசாயி. இவரது மனைவி திவ்யா. கணவருக்கு காபி சாகுபடியில் உதவி செய்யும் திவ்யாவுக்கு, காபி கொட்டைகளை சேகரிக்கும் பழக்கம் இருந்தது. அதில் இருந்து என்ன செய்வது என்று யோசித்த போது, மாலை செய்யலாம் என ஐடியா கிடைத்தது. காபி கொட்டைகளுக்கு நடுவில் சிறிய, சிறிய பாசிகளை பொருத்தி, அழகாக மாலை செய்ய ஆரம்பித்தார். இந்த மாலைகளை காபி வாரியத்தால் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் சந்தைப்படுத்தினார். மாலைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நாளடைவில் அரசியல் பிரமுகர்களுக்கு அணியவும், திவ்யா அலங்கரிக்கும் காபி கொட்டை மாலைகள் பயன்படுத்தப்பட்டன. மலைநாடு பகுதிகளின் காபி, காபி பொருட்களை வெளிநாடுகளுக்கு அறிமுகப்படுத்துவதில் திவ்யா முக்கிய பங்கு வகிக்கிறார். ஏலக்காயில் மாலை போடும் போது, காபி கொட்டையிலும் ஏன் மாலை தயாரிக்க கூடாது என்ற எண்ணம் தோன்றியதால், காபி கொட்டை மாலை தயாரித்ததாக அவர் கூறி உள்ளார். - நமது நிருபர் -