மேலும் செய்திகள்
திருநங்கையர் விருது விண்ணப்பிக்க அழைப்பு
12-Jan-2026
திருநங்கையர் என்றாலே பாலியல் தொழில் செய்பவர்கள்; சிக்னலில் நின்று பிச்சை எடுப்பவர்கள்; மிரட்டி பணம் பறிப்பவர்கள் என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு. ஆனால் திருநங்கையர் சிலர் உழைப்பின் மூலமும் சாதித்து உள்ளனர். இவர்களில் ஒருவர் அருந்ததி மாண்டியா, 35. கால்நடைகள் வளர்ப்பின் மூலம் சுயசார்பு வாழ்க்கை வாழ்கிறார். பெங்களூரில் இருந்து தாவணகெரே செல்லும் வழியில், சித்ரதுர்காவின் பரமசாகர் பகுதியில், அருந்ததிக்கு சொந்தமான கால்நடை பண்ணை உள்ளது. தாய் ஆதரவு தன் பயணம் குறித்து அருந்ததி கூறியதாவது: என் சொந்த ஊர் தட்சிண கன்னடாவின் மங்களூரு. ஆணாக பிறந்த எனக்கு 10 வயது இருக்கும் போது, உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. என்னை பெண்ணாக உணர துவங்கினேன். தாயின் ஆதரவு இருந்த போதும், சகோதரர் என்னை ஆணாக நடந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். எஸ்.எஸ்.எல்.சி., படித்த பின் வீட்டை விட்டு வெளியேறினேன். எங்கு செல்வது என தெரியாமல் மங்களூரு ரயில் நிலையத்தில் நின்ற போது, ஒரு திருநங்கையை சந்தித்தேன். அவர் என்னை கேரளாவில் உள்ளன. திருநங்கை அமைப்பான மலபார் கலாசார மையத்திற்கு அழைத்து சென்று விட்டார். அவர்கள் எனக்கு கல்வி கொடுத்தனர். சுயமரியாதை மற்ற திருநங்கையர் போல இல்லாமல், சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்று நினைத்தேன். கடந்த 2011ல் தொலை துார கல்வி மூலம், சமூகவியல் முதுகலை பட்டம் பெற்றேன். பின், கர்நாடகா திரும்பி ராம்நகர் சென்று, அரசுசாரா நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். கால்நடை வளர்ப்பு மீது எனக்கு ஆர்வம் இருந்தால், அரசுசாரா நிறுவனம் மூலம், கால்நடை வளர்ப்பு திட்டத்தில் சென்று பயிற்சி எடுத்தேன். கடந்த 2012ல் அந்நிறுவனம் மூடப்பட்ட போது, வேலை தேட ஆரம்பித்த போது திருநங்கை என்பதால் கிடைக்கவில்லை. வேறு வழியின்றி பிச்சை எடுத்ததுடன், பாலியல் தொழிலும் செய்தேன். ஊரடங்கு காலம் அந்த நேரத்தில் எனக்கு சாவித்ரி என்ற திருநங்கை அறிமுகம் கிடைத்தது. அவரது உதவியில் நான்கு ஆடுகளை வாங்கினேன். மாண்டியா இந்தவாலு கிராமத்திற்கு சென்று புதிய வாழ்க்கை துவங்கினேன். ஆட்டின் பாலை விற்பனை செய்து, அதில் கிடைத்த பணத்தில் கடந்த 2019ல், 100 கோழிகள், செம்மறி ஆடுகளை வாங்கி கால்நடை தொழிலை விரிவுபடுத்தினேன். மாண்டியா எனக்கு மறு வாழ்வு கொடுத்ததால் அருந்ததி என்ற பெயருக்கு பின்னால் மாண்டியா என்ற பெயரை சேர்த்து கொண்டேன். கடந்த 2020ல் கொரோனா ஊரடங்கு காலத்தில் என் பண்ணையில் இருந்து 20 ஆடுகள், 30 கோழிகள் திருடப்பட்டன. இதனால் என் வாழ்க்கை தடம் புரண்டது. தயக்கம் இருந்தாலும், வாழ்க்கையை நடத்த மீண்டும் பாலியல் தொழிலுக்கு சென்றேன். சித்ரதுர்கா சென்று மீண்டும் கால்நடை வளர்ப்பை துவக்கினேன். 2023ல் மீண்டும் 50 ஆடுகள் திருடப்பட்டன. சில திருநங்கையர் எனக்கு எதிராக சதி செய்தனர். விரக்தியில் தற்கொலைக்கும் முயன்றேன். அந்த நேரத்தில், கர்நாடக மாநில பெண்கள் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் புஷ்பலதாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் என் பிரச்னையை கூறினேன். மேம்பாட்டு கழகத்தில் இருந்து எனக்கு 23 லட்சம் ரூபாய் கடன் வழங்கினார். பரமசாகரில் ஒரு பண்ணை அமைத்து கால்நடை வளர்ப்பில் ஈடுபடுகிறேன். சுயசார்பு வாழ்க்கை வாழ ஆசைப்படும் திருநங்கையருக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். நான் பயின்ற கல்வி மூலம், திருநங்கையருக்கு அரசு சார்பில் கிடைக்கும் உதவிகளை வாங்கி கொடுக்க முயற்சி எடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -
12-Jan-2026