மத்திய அரசு உதவியால் தொழிலதிபர் முன்மாதிரியாக திகழும் மம்தா விநாயக்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பெண்களை தொழில் அதிபர், தொழில் முனைவோர் ஆக்க பல திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. குக்கிராமத்தில் பிறந்து குறைந்த கல்வி அறிவு கொண்ட பெண்கள் கூட, மத்திய அரசின் பல திட்டங்கள் மூலம் இப்போது உயர்ந்த நிலைக்கு வந்து உள்ளனர். இவர்களில் ஒருவர் மம்தா விநாயக். கர்நாடகாவின் கடலோர மாவட்டமான, உத்தர கன்னடாவின் சித்தாபூர் தாலுகாவில் உள்ள ஷாமனே என்ற சிறிய கிராமத்தில் மம்தா விநாயக் வசிக்கிறார். வணிகவியல் பட்டதாரியான இவர், சிர்சியில் உள்ள மார்க்கெட்டிங் நிறுவனத்தில், சில ஆண்டுகள் பணி செய்தார். அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தந்த ஊக்கத்தால் சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்று நினைத்தார். சிர்சியில் உள்ள கடம்பா மார்க்கெட்டிங் நிறுவனத்துன் டீல் பேசினார். அந்நிறுவனம் பலா பழங்களை, மம்தாவிடம் இருந்து வாங்க ஒப்பு கொண்டது. கடந்த 2022ம் ஆண்டு மத்திய அரசின், 'நுண் உணவு பதப்படுத்தும்' திட்டத்தின் கீழ் வங்கிகளில் இருந்து, மம்தாவுக்கு 15 லட்சம் ரூபாய் கடனாக கிடைத்தது. பணத்தை பயன்படுத்தி பலா பழங்களை பேக்கிங் செய்யும் இயந்திரம் உள்ளிட்ட அதிநவீன இயந்திரங்களை வாங்கி தொழிலை துவக்கினார். சில நாட்களில் கசாய பவுடர், மிளகு பவுடர், வாழைப்பழ சிப்ஸ் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்க ஆரம்பித்தார். தனது தயாரிப்பு பொருட்களுக்கு தீக் ஷா என்று பெயரிட்டு உள்ளார். இதுகுறித்து மம்தா கூறியதாவது: மத்திய அரசு பெண்களை பொருளாதார ரீதியாக முன்னேற்ற பல திட்டங்களை கொண்டு வந்து உள்ளது. இத்திட்டங்களை பயன்படுத்தி, பெண்கள் தொழில் முனைவோராக மாற வேண்டும். எல்லா விஷயத்திற்கும் கணவர் கையை எதிர்பார்த்து இருப்பதை விட, வீட்டில் இருந்தே சொந்தமாக தொழில் துவங்கி வெற்றி பெறலாம். ஒரு காலத்தில் இன்னொருவரிடம் வேலை செய்த நான், தற்போது நான்கு பெண்களுக்கு வேலை வழங்கும் அளவுக்கு முன்னேறி உள்ளேன். தரமான பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பது எனது குறிக்கோள் இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -