உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடவள் அரங்கம் /  துப்பாக்கி சுடுவதில் வெள்ளி பதக்கம் வென்ற பரிமளா ஜக்கேஷ்

 துப்பாக்கி சுடுவதில் வெள்ளி பதக்கம் வென்ற பரிமளா ஜக்கேஷ்

- நமது நிருபர் - நடிகரும், பா.ஜ., தலைவருமான ஜக்கேஷின் மனைவி பரிமளா, துப்பாக்கி சூட்டில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். ஜக்கேஷின் மனைவி பரிமளா, 57, டாக்டராக இருக்கிறார். திறமையான டாக்டர் என, பெயர் பெற்றுள்ள இவருக்கு, விளையாட்டிலும் அதிக ஆர்வம் உள்ளது. குறிப்பாக துப்பாக்கி சுடுதலில் திறன் பெற்றவர்.பெங்களூரின், 'ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா' விளையாட்டு அரங்கில், சில நாட்களுக்கு முன், துப்பாக்கி சுடும் போட்டி நடந்தது. மாஸ்டர் வுமன் இன்டிவிஜுவல் பிரிவில் பங்கேற்ற பரிமளா, வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இவர் கடந்த 1994ல் இருந்து நீரிழிவு நோயால் அவதிப்படுகிறார். இதனால், விளையாட்டு துறையில் சாதிப்பது, எளிதான விஷயம் அல்ல. துப்பாக்கி சுடுவதற்கு அதிகமான உடல் வலு அவசியம். நீரிழிவு அளவில் மாற்றத்தாழ்வு ஏற்பட்டால், கைகள் நடுங்கும். இந்த சவாலை சமாளித்து, கடுமையாக பயிற்சி பெற்றார். உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடித்து, நீரிழிவை கட்டுக்குள் வைத்திருந்து, துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று, வெள்ளிப்பதக்கம் வென்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். 'கோல்டன் ஏஸ் ஷூட்டிங் ஸ்போர்ட்ஸ் அகாடமி'யின், பிரசித்தி பெற்ற கோச் சந்தோஷிடம், சில மாதங்களுக்கு முன்புதான், பரிமளா பயிற்சியை துவக்கினார். குறுகிய காலத்தில் திறமையை காட்டியுள்ளார். இது தவிர ஒரு தொழிலதிபராக, ஒரு நிறுவனத்தின் பொறுப்பை ஏற்று, வெற்றிகரமாக நடத்துகிறார். பொறுப்பான குடும்ப தலைவியாக குடும்பத்தையும் நிர்வகிக்கிறார். இதற்கிடையே தினமும் அதிகாலை 4:00 மணிக்கு எழுந்து, துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றார். அவரது உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது. பரிமளா ஜக்கேஷின் வாழ்க்கை, மற்ற பெண்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு. இவரும், ஜக்கேஷும் காதலித்து பல போராட்டங்களுக்கு பின், திருமணம் செய்து கொண்டனர். தங்களின் காதல் திருமணத்தை பற்றி, ஜக்கேஷ் பல முறை கூறியுள்ளார். திருமணமான போது, பரிமளா பத்தாம் வகுப்பு மட்டுமே படித்திருந்தார். குழந்தை பிறந்த பின்னரும், படிப்பை தொடர்ந்து பல பட்டங்களை பெற்றுள்ளார். நீரிழிவை கட்டுப்படுத்துவது தொடர்பாக, இவர் செய்த ஆராய்ச்சிக்காக, இவருக்கு, 'கவுரவ டாக்டரேட்' பட்டம் கிடைத்தது.இவரது மன உறுதி, சாதனையை மற்ற பெண்கள் உதாரணமாக எடுத்து கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை