உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடவள் அரங்கம் / தையல்காரரான தையல் தாய்க்கு தோள் கொடுத்த தவப்புதல்வி

தையல்காரரான தையல் தாய்க்கு தோள் கொடுத்த தவப்புதல்வி

பெண்கள் மனம் வைத்தால், தங்கள் தலை எழுத்தை மட்டுமின்றி, குடும்பத்தின் தலை எழுத்தையும் மாற்ற முடியும். இதை, சமுதாயத்தில் பல பெண்கள் நிரூபித்துள்ளனர். இந்த கட்டுரையின் நாயகி வைஷாலியும் அந்த ரகம் தான்.தார்வாடின் லட்சுமி சிங்கனகேரி கிராமத்தில் வசிப்பவர் வைஷாலி கோசாவி, 19. இவருடையது 12 பேர் கொண்ட குடும்பமாகும். இவர்கள் பல காலமாக சாலையில் கிடக்கும் காகிதம், பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து விற்று, அதில் கிடைக்கும் பணத்தில் வாழ்க்கை நடத்துகின்றனர். வைஷாலியின் தந்தை இறந்த பின், குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பை, அவரது தாயின் தோளில் ஏறியது. அவரும் அதே தொழிலை செய்து குடும்பத்தை காப்பாற்றினார்.

பசி, பட்டினி

தினமும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்பதில், 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை வருவாய் கிடைத்தது. இது போதாமல் வறுமை, பசி, பட்டினியுடன் வாழ்க்கை நடத்தினர். இதற்கிடையே கோவாவில் ஏழாம் வகுப்பு வரை படித்த வைஷாலி, தார்வாட் திரும்பிய பின், படிப்பை நிறுத்தினார். தன் தாயின் சுமையை குறைக்க விரும்பினார்.குப்பை சேகரிக்கும் தொழிலை செய்ய, அவருக்கு பிடிக்கவில்லை. துணிக்கடையில் பணிக்கு அமர்ந்தார். காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை பணியாற்றினார். ஏதாவது கைத்தொழிலை கற்று கொண்டால், உதவியாக இருக்கும் என நினைத்தார்.இரண்டரை ஆண்டுகளுக்கு முன், சுவாமி விவேகானந்தா யூத் மூவ்மென்ட் தொண்டு அமைப்பின் அங்கமான விவேகா கிராமிய வேலை வாய்ப்பு மையத்தில் சேர்ந்து, மூன்று மாதங்கள் தையல் மற்றும் பேஷன் டிசைனிங்கில் பயிற்சி பெற்றார்.

அதிக சம்பாத்தியம்

பயிற்சி முடிந்த பின், தார்வாடின் கே.வி.ஜி., வங்கியில் கடன் பெற்று, தையல் இயந்திரம் வாங்கி, சொந்த தொழிலை துவக்கினார். படிப்படியாக தொழிலில் முன்னேறினார். சம்பாத்தியமும் அதிகமானது. தாயுடன் நின்று, குடும்பத்தை முன் நடத்துகிறார்.தொழில் செய்ய வீட்டில் இட வசதி இல்லை. எனவே மீண்டும் அதே வங்கியில் கடன் பெற்று, வீட்டின் அருகிலேயே டெய்லரிங் ஷாப் அமைப்பதை, வைஷாலி குறிக்கோளாக கொண்டார்.தன் சகோதரிகளுக்கு மட்டுமின்றி, சுற்றுப்பகுதியின் பல பெண்களுக்கு தையல் கலையை கற்று கொடுத்து, அவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றுகிறார். இவரது வாழ்க்கை, தன்னம்பிக்கை சோர்ந்து கிடக்கும் பெண்களுக்கு வழிகாட்டியாக உள்ளது. மன உறுதியும், விடா முயற்சியும் இருந்தால், வாழ்க்கையை புரட்டி போடலாம் என்பதை வைஷாலி செய்து காட்டியுள்ளார். இவர் மேலும் வளர வேண்டும் என, நாமும் வாழ்த்தலாமே.

சொந்த தொழில்

வைஷாலி கூறியதாவது:எங்கள் குடும்பத்தில் பெண்கள் கல்வி கற்க முடியாது. வெளியே வேலைக்கும் செல்ல வழியில்லை. சாலைகளில் காகிதம், பிளாஸ்டிக் சேகரித்து விற்று பிழைக்க வேண்டி இருந்தது. ஆனால் எனக்கு இந்த வேலையை செய்வதில், சிறிதும் விருப்பம் இல்லை. சொந்த தொழில் துவங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.தையல் பயிற்சியை முடித்து, வங்கி கடனுதவியால் தையல் இயந்திரம் வாங்கி, தொழிலை துவக்கினேன். ஆரம்ப நாட்களில் ஆர்டர்கள் வரவில்லை. அதன்பின் என் தையல் நேர்த்தி பிடித்ததால், மக்கள் என்னை தேடி வந்தனர். என்னை பற்றி மற்றவரிடம் கூறியதால், தற்போது எனக்கு ஆர்டர்கள் அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி