நல்ல உடல்வாகு கொண்ட மனிதர்களை விட, மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இந்த உலகம் நம்மை திரும்பி பார்க்க வேண்டும் என்று நினைப்பர். இதற்காக எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் தாங்கிக் கொள்வர். இதனால், பல துறைகளில் மாற்றுத்திறனாளிகள் சாதித்தது ஏராளம். அதுபோல விளையாட்டிலும் பலர் தங்கள் திறமையை வெளிக்காட்டி உள்ளனர். அவர்களில் ஒருவரை பற்றி பார்ப்போம்.பெங்களூரின் பசவனகுடி விஸ்வேசபுராவை சேர்ந்தவர் சரத் கெய்க்வாட், 33. இவர், 1991ம் ஆண்டு பிறந்தார். பிறக்கும்போதே இடது கை ஊனத்துடன் பிறந்தார். பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் போது, சக மாணவர்களுடன் நீச்சல் வகுப்பிற்கு செல்ல ஆசைப்பட்டார். ஆனால் அவரது இயலாமை காரணமாக பெற்றோர் முதலில் பயந்தனர். வியப்பு
பெற்றோரிடம் எடுத்துக் கூறி ஒருவழியாக சம்மதம் வாங்கினார். நீச்சல் பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டார். இதனால் பள்ளி அளவிலான மாற்றுத்திறனாளிகள் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த 2003 ம் ஆண்டு நீச்சல் பயிற்சியாளரான ஜான் கிறிஸ்டோபர், ஒரு போட்டியில் சரத்தின் திறமையை கண்டு வியந்தார். பின், அவருக்கு பயிற்சி அளிக்க ஆரம்பித்தார்.கடந்த 2008 முதல் தேசிய மற்றும் சர்வதேச நீச்சல் போட்டிகளில் இந்தியாவிற்காக நீச்சல் அடித்தார். அந்த ஆண்டில் மட்டும் நான்கு தங்கம், இரண்டு வெள்ளி, இரண்டு வெண்கலம் வென்று சாதனை படைத்தார். கடந்த 2010 ம் ஆண்டு சீனாவின் குவாங்சோவில் நடந்த, ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் 100 மீட்டர் துார போட்டியில் இலக்கை, ஒரு நிமிடம் 20 வினாடிகளில் கடந்து அசத்தினார். ஓய்வு
இந்த செயல்திறன் கடந்த 2012ல் நடந்த லண்டன் பாரா ஒலிம்பிக்கில் இடம் பெற வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது. அந்த ஆண்டு, பாரா ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற ஒரே நபர் இவர்தான். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் நீச்சலில் பல சாதனை படைத்தார். கடந்த 2014 ல் தோள்பட்டையில் காயம் அடைந்த சரத்துக்கு, அதில் இருந்து மீண்டு வருவது பெரிய சவாலாக இருந்தது. இதனால் நீச்சல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.போட்டிகளில் பங்கேற்று 30 க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் 40 க்கும் மேற்பட்ட, தேசிய பதக்கம் வென்று உள்ளார். ஓய்வுக்குப் பின், பல நீச்சல் கிளப்புகளில் பயிற்சியாளராக இருந்தார். தற்போது பெங்களூரு ஜீ நீச்சல் அகாடமி கிளப் திட்ட இயக்குநராக உள்ளார்.