கிரிக்கெட்டில் சாதிக்கும் குடகின் 15 வயது மாணவி
கர்நாடகாவின் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த குடகை சேர்ந்த மாணவி ஓடியண்டா ரோஹினி தேச்சம்மா, 15, சர்வதேச தரத்தில் கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் 'தேசிய கிரிக்கெட் அகாடமி'க்கு தேர்வாகி உள்ளார்.ஆண்கள் மட்டுமே கோலோச்சி வந்த கிரிக்கெட்டில், தற்போது பெண்களும் சாதனை புரிந்து வருகின்றனர். இந்த வரிசையில், குடகு மாவட்டம் சுர்லப்பி கிராமத்தை சேர்ந்தவர் ஓடியண்டா சதி - சரிதா தம்பதி மகள் ஓடியண்டா ரோஹினி தேச்சம்மா. டிவியில் ஒளிபரப்பாகும் கிரிக்கெட் போட்டியை, தந்தையுடன் அமர்ந்து ரோஹினி பார்த்து வந்தார்.இதனாலேயே கிரிக்கெட் மீது அவருக்கு விருப்பம் ஏற்பட்டது. இதை தன் தந்தையிடம் கூற, அவரும் மகளின் விருப்பத்தை ஏற்று, ஒன்பது வயதில் பயிற்சிக்கு அனுப்பினார். கிரிக்கெட் மீதான இவரின் ஆர்வம், விரைவில் அதன் நுணுக்கங்களை கற்றுக் கொண்டார்.குடகின் ஹூடிகேரியில் நடந்த 'செக்கெரா கிரிக்கெட் விளையாட்டில்' தனது முதல் போட்டியில், 7 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். தொடர்ந்து பல போட்டிகள் விளையாடி, அணியை இறுதி சுற்றுக்கு கொண்டு செல்ல காரணமாக அமைந்தார். பேட்டிங்கில் மட்டுமின்றி, பவுலிங்கிலும் சிறந்து விளங்குகிறார்.தொடர்ந்து பல போட்டிகளில் விளையாடி வந்த ரோஹினி, தனது 13 வயதிலேயே, 23 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியினருடன் விளையாடி, அவர்களை ஆச்சரியப்பட வைத்தார். 15 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒரு நாள் போட்டியில், 95 ரன்கள் எடுத்துள்ளார். அதுபோன்று கிளப்கள் அளவிலான போட்டியில், 27 பவுண்டரிகள், ஒரு சிக்ஸ் என மொத்தம் 121 ரன்கள் அடித்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.தற்போது பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள கர்நாடக கிரிக்கெட் பயிற்சி மையத்தில், நான்கு ஆண்டுகளாக பயிற்சி பெற்று வருகிறார். பெங்களூரு திப்பசந்திரா அணிக்காக விளையாடிய இவர், மாருதி சேவா நகர் அணிக்கு எதிராக ஆறு பந்துகளில் ஆறு சிக்சர் அடித்தார்.சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம், புதுடில்லியில், 15 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் கிரிக்கெட் போட்டி நடத்தியது. இதில், கர்நாடகாவுக்காக துவக்க ஆட்டக்காரர்களாக ரோஹினி, லியங்கா ஷெட்டியுடன் களம் இறங்கினார். இருவரும் சேர்ந்து டில்லி அணிக்கு எதிராக 101 ரன்கள் குவித்து, கர்நாடக வெற்றிக்கு வித்திட்டனர். 42 ரன்கள் எடுத்த ரோஹினியின் ஆட்டம், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர்களை கவர்ந்துள்ளனர்.இதையடுத்து வாரியத்தின் கீழ் செயல்படும், தேசிய கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்துள்ள இவர், தேசிய அளவிலான கிரிக்கெட் வீராங்கனையருடன் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார். மலை பிரதேசமான குடகில் பிறந்த ரோஹினி, வருங்காலத்தில் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீரர் ஸ்மிருதி மந்தன்னாவுடன் ஓடியண்டா ரோஹினி தேச்சம்மா - நமது நிருபர் -.