உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் / பார்முலா ஒன் கார் பந்தயத்தில் கலக்கும் 17 வயது சிறுவன்

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் கலக்கும் 17 வயது சிறுவன்

கார் பந்தயத்தில் வெளிநாட்டினர் மட்டுமே பங்கேற்ற நிலையில், 2000ம் ஆண்டு துவக்கத்தில் நரேன் கார்த்திகேயன், கருண் சந்தக் ஆகியோர், 'மோட்டார் ஸ்போர்ட்ஸ்'சில் உலகளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர். அவர்களால் நீண்ட நாட்கள் இத்துறையில் நிலைத்து நிற்க முடியவில்லை. தற்போது சூழ்நிலை மாறி வருகிறது. இந்திய கார் ரேஸ் ஓட்டுநர்கள், 'பார்முலா ஒன்' கார் பந்தயத்தில் பங்கேற்கும் அளவுக்கு முன்னேறி உள்ளனர். இதில் ஒருவர் தான், பெங்களூரை சேர்ந்த தியான் கவுடா, 17.

கார்ட் பந்தயம்

இவரது தந்தை தொழிலதிபர். 'டிவி'யில், 'பார்முலா 1' கார் பந்தயத்தில், லிவிஸ் ஹாமில்டன் கார் ஓட்டி சென்ற விதம், தியான் கவுடாவுக்கு பிடித்து போனது. தனது 9 வயதில் சிங்கப்பூருக்கு குடும்பத்துடன் சென்ற போது, அங்கு சிறுவர்கள் மட்டும் பங்கேற்கும், 'கார்ட் பந்தயம்' போட்டியை பார்த்தார். அன்று முதல் கார் பந்தயங்களில் பங்கேற்க முடிவு செய்தார்.பெங்களூரில் காடெட் - மினி 60 என்ற பந்தயத்தில் சர்வ சாதாரணமாக, நன்கு ஓட்ட தெரிந்த வீரர் போன்று ஓட்டி சென்றார். இவரின் திறமையை பார்த்த பெற்றோர் பிரமித்தனர். தியான் கவுடாவும், 'பார்முலா ஒன்' கார் பந்தய வீரராக வேண்டும் என்ற தனது கனவை நனவாக்க, லண்டனில் குடியேறினார்.

10வது வயதில்...

அங்கு 2017 ல் சிங்கப்பூரில் நடந்த, 'ஆர்.ஓ.கே., கப்' போட்டியில், நான்காவது இடத்தை பிடித்தார். 'எக்ஸ்30 இன்டர்நேஷனல்' போட்டியில் பங்கேற்பதற்காக நடந்த, 'எக்ஸ்30 சவுத் ஈஸ்ட் ஆசிய சாம்பியன்ஷிப்' போட்டியில் மூன்றாவது ரவுண்டில் மூன்றாவது இடத்தை பிடித்தார்.கார்டிங் எனும் சிறுவர்களுக்கான வோர்ல்டு சாம்பியன்ஷிப் பங்கேற்க, தனது 14வது வயதில் உலக சாம்பியன்ஷிப் கார்டிங் போட்டியில், ரிக்கி பிலின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்தார். 2023ல் ரோகிட் பிரிட்டிஷ் எப் 4 சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற தியான் கவுடா, இரண்டாவது இடத்தை பிடித்தார்.தொடர்ந்து 2024ல் நடந்த இத்தாலி எப் 4, யூரோ 4 சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். நடப்பாண்டு, 'பார்முலா பிராந்தி ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில், வான் அமர்ஸ்புரூட் ரேசிங்குடன் இணைந்து உள்ளார்.

அடுத்த தலைமுறை

இது குறித்து தியான் கவுடா கூறியதாவது:முழுநேர கார் பந்தய வீரராக உள்ளேன். வாரத்திற்கு ஒருமுறை, எனது பயிற்சியாளருடன் சேர்ந்து, அந்த வாரத்தில் நான் பெற்ற பயிற்சி குறித்து விவாதிப்பேன். ஒவ்வொரு போட்டிக்கு செல்லும் முன், எனது திறமையை வளர்த்து கொள்வேன்.நான் கார் பந்தயத்தில் பங்கேற்கவில்லை என்றால், எனது தந்தையின் தொழிலை கவனித்து கொண்டிருப்பேன். என் கனவு 'பார்முலா 1'ல் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமல்ல, அடுத்த தலைமுறையினருக்கு இந்த போட்டியை கொண்டு செல்ல வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை