17 வயது சிறுமி துப்பாக்கி சூட்டில் அசத்துகிறார்
- நமது நிருபர் -: கடந்தாண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை தவற விட்டாலும், இந்தாண்டு தேசிய சீனியர் துப்பாக்கி சுடும் போட்டியில், 17 வயது சிறுமி முதலிடம் பிடித்து அசத்தி உள்ளார். சுஜித் சென் - நந்திதா என்ற மென் பொறியாளர் தம்பதியின் மகள் திலோத்தமா சென், 17. கொல்கட்டாவை சேர்ந்த இவரின் பெற்றோர், பணி நிமித்தமாக பெங்களூருக்கு குடிபெயர்ந்தனர். 2008ல் பெங்களூரில் பிறந்த திலோத்தமா, தற்போது புளுபெல் பப்ளிக் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். ஈர்ப்பு இவர் பிறந்து சில மாதங்களே ஆன போது, 2008ல் சீனாவின் பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார். சில வருடங்கள் கழித்து அபினவ் பிந்த்ரா, துப்பாக்கி சூட்டில் தங்கம் வென்ற வீடியோவை, திலோத்தமா சென் பார்த்தார். அன்று முதல் துப்பாக்கி சுடுதலில் அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டு, தனது தந்தையிடம் கூறி உள்ளார். அவரும் தன் மகளை பயிற்சிக்கு அனுப்பினார். கொரோனா காலத்தில் மேற்கொண்ட தீவிர பயிற்சியால், இந்திய ஜூனியர் அணியில் இடம்பிடித்தார். அதன்பின், டில்லியில் உள்ள என்.சி.ஓ.இ., எனும் தேசிய சிறப்பு மையத்தில் சேர்ந்து, தேசிய துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் மனோஜ் குமாரிடம் பயிற்சி பெற்றார். அதன்பின் பல்வேறு தேசிய போட்டிகளில் விளையாடினார். 2023ல் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். இழப்பு பாரிசில், 2024ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக, 10 மீட்டர் துாரம் துப்பாக்கி சுடுதலில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். டில்லியில் நடந்த இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கான தேர்வில், சில புள்ளிகள் வித்தியாசத்தில் வாய்ப்பை இழந்தார். இதனால் மனதளவில் சோர்ந்திருந்த அவருக்கு, பயிற்சியாளர் மனோஜ் குமார், 50 மீட்டர் துப்பாக்கி சூட்டில் பங்கேற்க ஊக்கம் அளித்தார். அவர் கூறியபடியே, பயிற்சி மேற்கொண்ட திலோத்தமா, இந்தாண்டு நடந்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றோர். 50 மீட்டர் ரைபிள் '3 பி' என்பது, 8 கிலோ வரை எடை கொண்ட துப்பாக்கி. ஒலிம்பிக் போட்டியில் இது உயர்தரமாக கருதப்படுகிறது. '3 பி' என்பது மிகவும் கடினமானது. இந்த பிரிவில் முட்டியிட்டபிடியும், சாய்ந்தபடியும், நின்றபடியும் சுட வேண்டும். சாதிப்பு போபாலில் நடந்த 68வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், 6 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கல பதக்கம் வென்று அசத்தினார். திலோத்தமா கூறியதாவது: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்ததால் மிகவும் வேதனையில் இருந்தேன். இனி துப்பாக்கி சூட்டில் ஈடுபடக்கூடாது என்று தோன்றியது. ஒரு வருடம் முழுதும் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டேன். அப்போது, என் பயிற்சியாளர் மனோஜ் குமார், 50 மீட்டர் '3பி' பிரிவில் பங்கேற்க ஊக்கம் அளித்தார். இது எனக்கு புதிதாக இருந்ததால், என் கவனத்தை ஒருமுகப்படுத்தி, மீண்டும் இந்த விளையாட்டை ரசிக்க துவங்கினேன். இதில் பயிற்சி பெற்ற மூன்று, நான்கு மாதங்களில் 50 மீட்டர் பி ரிவில், '3 பி'யிலும், 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலிலும் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மாற்றம் தெரிந்தது. தொடர் பயிற்சியால், பலன் கிடைத்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க, இந்தாண்டு நடக்கும் ஆசிய விளையாட்டு மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் முக்கியம் வாய்ந்தவை. இதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளேன். இவ்வாறு அவர் கூறி னார்.