உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் / ராமாயணம், மஹாபாரதத்தை பார்த்து வில் வித்தையில் அசத்தும் 8 வயது சிறுமி

ராமாயணம், மஹாபாரதத்தை பார்த்து வில் வித்தையில் அசத்தும் 8 வயது சிறுமி

தந்தையின் கனவை நனவாக்க, 'டிவி'யில் ராமாயணம், மஹாபாரதத்தை பார்த்து, பெங்களூரை சேர்ந்த 8 வயது சிறுமி, வில்வித்தையில் அசத்தி வருகிறார்.இன்றைய கால சிறுவர், சிறுமியர் சிலர், டிவியில் கார்ட்டூன், மொபைல் போனில் கார்ட்டூன் என்று காலத்தை போக்குகின்றனர். அவர்களிடம் மொபைல் போனை பறித்தால், கூச்சலிடுகின்றனர்; பொருட்களை உடைக்கின்றனர்.பெங்களூரை சேர்ந்தவர் அஜித் குமார் வெர்மா. தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரின் மகள் ஆன்யா வெர்மா. ஆந்திர மாநிலம் கண்டூரில் 10 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய வில்வித்தை போட்டி நடந்தது. இதில் கர்நாடகா சார்பில் பலர் பங்கேற்றனர். 20 மீட்டர் துார போட்டியில், ஆன்யா வெர்மா, 360 புள்ளிகளுக்கு 352 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்து, மாநிலத்துக்கு பெருமை சேர்த்தார். அதுபோன்று தனிப்பட்ட நபர் பிரிவில் 3 - 7 செட் புள்ளி பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.தன் வெற்றி குறித்து, ஆன்யா வெர்மா கூறியதாவது:'டிவி'யில் ராமாயணம், மஹாபாரதத்தை பார்ப்பேன். அதில் ராமர், வில் மூலம் பயிற்சி எடுப்பதை பார்த்தேன். அவர் இலக்கை சரியாக தாக்குவதை பார்த்து எனக்கு, வில்வித்தை மீது ஆர்வம் ஏற்பட்டது.என் ஆசையை தந்தையிடம் கூறினேன். அவரும் மகிழ்ச்சியுடன் என்னை பயிற்சிக்கு அனுப்பி வைத்தார். ஏனெனில், என் தந்தைக்கும் வில்வித்தை மீது ஆர்வம் இருந்தது. ஆனால், சிறு வயதில் குடும்பத்தின் பொறுப்பு அவர் மீது இருந்ததால், அவரின் ஆசை நிறைவேறவில்லை.அவரின் கனவை நிறைவேற்றவும், ஒலிம்பிக்கில் நாட்டுக்காக தங்கப்பதக்கம் வாங்கி தர வேண்டும் என்றும் விரும்புகிறேன். இதற்காக தினமும் காலை 7:00 மணிக்கு எழுந்து கொள்கிறேன். 8:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை பள்ளியில் பாடம் படிக்கிறேன். அதன் பின், பயிற்சியில் ஈடுபடுவேன்.பெங்களூரு வில்வித்தை கிளப்பில் பயிற்சியாளர்கள் சுபாஷ், ராஜேஷ் ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர். எனக்கு வில்வித்தையை தவிர, இசை கேட்பதிலும், நடனம் ஆடுவதிலும் விருப்பம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.ஆன்யாவுக்கு பயிற்சி அளிக்கும் சுபாஷ் கூறுகையில், ''எங்கள் கிளப்பில் பயிற்சியில் ஈடுபடுவோர் பயம், தோல்வியை நெருங்க விடுவதில்லை. இங்குள்ளோர் நண்பர்களாக நினைத்து பழகும் சூழ்நிலையை உருவாக்கி உள்ளோம். இதனால் போட்டியில் பங்கேற்கும்போது, நண்பர்களுடன் விளையாடும் எண்ணத்தை அவர் மனதில் விதைத்துள்ளோம்.''சிறு வயதில் இத்தகைய சாதனை படைப்பதற்கான பெருமை, அவரின் பெற்றோருக்கு தான் சேரும். வாரத்தில் இறுதி நாளில், அவரின் தந்தை இங்கு அழைத்து வந்துவிடுவார். உடற்பயிற்சி, உணவு பழக்கத்திலும், ஆன்யாவின் தாயார், மகளுக்கு உதவியாக உள்ளார்,'' என்றார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை