விளையாட்டில் புகுத்தப்படும் ஏ.ஐ., நவீன தொழில்நுட்பம்
இன்றைய நவீனகால கட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி, ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. மனிதர்கள் வேலையை குறைக்கும் வகையில் ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு உள்ளது. அரசு, தனியார் துறைகளிலும் தொழில்நுட்பம் இன்றியமையாத ஒன்றாக மாற போகிறது.இந்நிலையில், கர்நாடக அரசு விளையாட்டிலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளது. தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங்க் கார்கேவை, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாண ஆணையர் மிச்செல் வேட் தலைமையிலான, ஆஸ்திரேலியா பிரதிநிதிகள் சந்தித்து பேசினர்.இந்த சந்திப்பின் போது விளையாட்டு துறையில் புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பங்களை புகுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பின், விளையாட்டு கண்டுபிடிப்பு, தொழில்நுட்ப உச்சிமாநாடு குறித்தும் பேச்சு நடந்தது.இதுகுறித்து பிரியங்க் கார்கே அளித்த பேட்டியில், ''விளையாட்டில் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று கர்நாடக அரசு முடிவு செய்து உள்ளது. தரவு பகுப்பாய்வு, ஏ.ஐ., மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளின் செயல்திறன், விளையாட்டு உத்திகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டது.''விளையாட்டு வீரர்களை ஒருங்கிணைத்து, அதிநவீன முன்னேற்றங்களை கொண்டு வரவும் தொழில்நுட்பம் உதவும். விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து வித உதவிகள், அவர்களின் தேவையை நிறைவேற்றுவதில், காங்கிரஸ் அரசு உறுதியாக உள்ளது,'' என்றார்.கர்நாடக விளையாட்டு அமைச்சராக இருந்த நாகேந்திரா, கடந்த ஆண்டு வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேட்டில் சிக்கி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின், விளையாட்டு துறை முதல்வர் வசம் சென்றது. ஆனால் முதல்வரிடம் ஒதுக்கப்படாத துறைகளும் இருப்பதால், விளையாட்டு துறையின் மீது முதல்வரால், தனி கவனம் செலுத்த முடியவில்லை என்றும் பேச்சு அடிபட்டது. அமைச்சர்கள் சிலரும் விளையாட்டு துறையை பெற முயற்சி செய்தனர். ஆனால், அது முடியாமல் போனது. இந்த சூழ்நிலையில் விளையாட்டில் தொழில்நுட்பத்தை புகுத்த முடிவு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது. - நமது நிருபர் -