உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் /  விளையாட்டு மைதானங்களில் அடிப்படை வசதி இல்லை காங்கிரஸ் அரசை விமர்சிக்கிறார் தடகள வீரர் லோகேஷ்

 விளையாட்டு மைதானங்களில் அடிப்படை வசதி இல்லை காங்கிரஸ் அரசை விமர்சிக்கிறார் தடகள வீரர் லோகேஷ்

தெலுங்கானா - கர்நாடகா மாநில எல்லையில் உள்ளது யாத்கிர் மாவட்டம். வளர்ச்சியிலும், கல்வியிலும் மிகவும் பின்தங்கிய மாவட்டமான இங்கிருந்து, யாராவது அரசு வேலையிலோ, விளை யாட்டிலோ ஜொலித்தால், அது பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது. யாத்கிர் மாவட்டத்தை சேர்ந்த லோகேஷ் ரத்தோட், தற்போது பிரபல தடகள வீரராக உள்ளார். கடந்த மாதம் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடந்த, 'கேலோ இந்தியா' தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்று, தடகள போட்டியில் மூன்றாவது இடம் பிடித்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவர் தற்போது. கர்நாடக காங்கிரஸ் மீது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். கை, கால் உடையும் பல்வேறு தடகள போட்டிகளில் பங்கேற்று பெற்ற, 50 க்கும் மேற்பட்ட பதக்கங்களை, யாத்கிர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் வைத்து நேற்று முன்தினம் போராட்டத்திலும் ஈடுபட்டார். அப்போது, லோகேஷ் ரத்தோட் கூறியதாவது: யாத்கிர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானங்களில் அடிப்படை வசதிகளே இல்லை. இதுகுறித்து நான் உட்பட பல விளையாட்டு வீரர்கள், விளையாட்டு துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம். ஆனாலும், நாங்கள் கூறுவதை அவர்கள் காது கொடுத்து கேட்பது இல்லை. எங்களை அலட்சியப்படுத்துகின்றனர். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க பயிற்சி எடுப்பதற்காக, சொந்த பணத்தை செலவு செய்து, பெங்களூரு செல்கிறேன். மாவட்ட விளையாட்டு மைதானத்தின் நிலை படுமோசமாக உள்ளது. வீரர்கள் இங்கு ஓடி பயிற்சி எடுத்தால், கீழே விழுந்து கை, கால்களை உடைப்பது நிச்சயம். கேலோ இந்தியா போட்டியில் மூன்றாவது இடம் பிடித்த போதும், யாத்கிர் மாவட்ட நிர்வாகம், எனக்கு வாழ்த்து எதுவும் தெரிவிக்கவில்லை. மாநில அரசும் கண்டுகொள்ளவில்லை. ஐ.பி.எல்., கிரிக்கெட் உள்ளிட்ட ஆடம்பர விளையாட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு கிடைக்கும் மரியாதை, எங்களை போன்றோருக்கு கிடைப்பது இல்லை. கிராம பகுதியில், ஏழை பின்னணியில் இருந்து வந்த எங்களை எல்லாம், அரசு கண்ணுக்கு தெரிவதே இல்லை. மரியாதை கிடைக்காத போது எதற்காக பதக்கம். இவ்வாறு அவர் கூறினார். அமைச்சர் வேண்டும் கர்நாடகாவில் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த நாகேந்திரா, வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வழக்கில் சிக்கியதால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால், விளையாட்டு துறை தற்போது, முதல்வர் சித்தராமையா வசம் உள்ளது. அவரிடம் ஒதுக்கப்படாத துறைகள் நிறைய இருப்பதால், விளையாட்டு துறையின் மீது அவரால் முழு கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால், அத்துறையை யாராவது ஒரு அமைச்சருக்கு ஒதுக்கி கொடுத்தால் மட்டுமே, விளையாட்டு வீரர்கள் நலனில் அரசால், முழு கவனம் செலுத்த முடியும் என்பதில் மாற்று கருத்தே இல்லை - நமது நிருபர் - .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ