உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் /  கிரிக்கெட்டுக்கு பிரியா விடை தந்த கவுதம்

 கிரிக்கெட்டுக்கு பிரியா விடை தந்த கவுதம்

கர்நாடகாவை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா கவுதம், 37. இவர், இந்திய கிரிக்கெட் அணியிலும் இடம் பெற்றிருந்தார். இது தவிர, ஐ.பி.எல்., போட்டிகளில் சென்னை, மும்பை, ராஜஸ்தான், லக்னோ, பஞ்சாப் அணிகளில், தனது பேட்டிங் திறனை காட்டி அசர வைத்தார். ரஞ்சி கோப்பையிலும் கர்நாடகா அணிக்காக சிறப்பாக விளையாடினார். கடந்த, 14 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வந்தார். ஐ.பி.எல்., போட்டிகளில் அதிரடியாக பேட்டிங் செய்து அதிக ரன்களை குவித்தார். தன் சுழல் பந்து வீச்சின் மூலம் விக்கெட்டுகளையும் எடுத்தார். இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரிதாக ஜொலிக்கவில்லை. அதேபோல, 37 வயதாகி விட்டதாலும் இனியும் இந்திய அணியில் இடம் கிடைப்பது இயலாத காரியம் என்பதை உணர்ந்தார். அதனால், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சமீபத்தில் அறிவித்தார். இவர் ஓய்வை அறிவிக்கும் போது, அவரது குடும்பத்தினர், கர்நாடகா கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் வெங்கடேஸ் பிரசாத், செயலர் சந்தோஷ் மேனன், துணை தலைவர் சுஜித் சோமசுந்தர் ஆகியோர் உடனிருந்தனர். அவரது கிரிக்கெட் வாழ்க்கையை மனதார பாராட்டினர். எதிர்காலத்தில் கவுதம் கிரிக்கெட் வர்ணனையாளராகவும், பயிற்சியாளராகவும் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - நமது நிருபர் -:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ