உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் / ஆரவாரமான மாட்டு வண்டி

ஆரவாரமான மாட்டு வண்டி

ஒரு காலத்தில் மனிதர்களின் வாழ்க்கையோடு ஒன்றியிருந்த அம்சங்களில், மாட்டு வண்டிகளும் ஒன்றாகும். இன்று நாம் இதை மறந்துவிட்டோம். சில கிராமங்களில் இப்போதும் மக்களின் பிரிக்க முடியாத அங்கமாக உள்ளது. அவ்வப்போது மாட்டு வண்டி போட்டிகள் நடத்தி, மக்களை உற்சாகப்படுத்துவதை பார்க்கலாம். மாட்டு வண்டி போட்டிகள், விவசாயிகளின் வாழ்க்கையில் புத்துணர்ச்சி ஏற்படுத்துகிறது. காளைகளின் உடற்திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. கிராமங்களின் சம்பிரதாய விளையாட்டுகளில், மாட்டு வண்டிப் போட்டியும் ஒன்றாகும். இந்த விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து, ஆண்டுதோறும் மாட்டு வண்டி ஓட்டப்பந்தயம் ஏற்பாடு செய்வது, கிராம மக்களின் ஒற்றுமைக்கு சாட்சியாகும். மைசூரு நகரின், துருகநுாரு கிராமத்தில், இரண்டு நாட்களுக்கு முன், மாட்டு வண்டிப்பந்தயத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுற்றுப்புற கிராமங்களின் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். துருகநுாரு கிராமத்தின் பிரதான சாலையில் உள்ள பொன்னக்கி சித்தப்பா என்பரின் நிலத்தில், கெம்பேகவுடா நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பில், மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. 50க்கும் மேற்பட்ட இரட்டை காளைகள் பங்கேற்று, மின்னல் வேகத்தில் ஓடியது, கண்கொள்ளா காட்சியாக இருந்தது. சுற்றிலும் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கைத்தட்டி, விசில் அடித்தும், ஆரவாரம் செய்து, மாடுகள் மற்றும் அவற்றின் உரிமையாளர்களை உற்சாகப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், விவசாயிகளுக்கும் வெற்றிக்கோப்பை, விருது சான்றிதழ் வழங்கப்பட்டன. முதல் பரிசாக 50,000 ரூபாய், இரண்டாம் பரிசாக 25,000 ரூபாய், மூன்றாம் பரிசாக 10,000 ரூபாய், ஆறுதல் பரிசாக 5,000 ரூபாய் வழங்கப்பட்டது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை