உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் / திறமையை நிரூபிக்க கூடைப்பந்து வீராங்கனை ஆன சஞ்சனா ரமேஷ்

திறமையை நிரூபிக்க கூடைப்பந்து வீராங்கனை ஆன சஞ்சனா ரமேஷ்

'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்ற பழமொழி உண்டு. இதன் அர்த்தம் அமைதியாக இருப்பவர்களை சீண்டி விட்டு, அவர்கள் ஏதாவது செய்தால் நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பது தான். இந்த பழமொழிக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர், பெங்களூரை சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை சஞ்சனா ரமேஷ், 24.கோனனகுன்டேயை சேர்ந்த சஞ்சனாவின் சகோதரர் கால்பந்து விளையாடுவதில் ஆர்வம் கொண்டவர். சகோதரரை பார்த்து கால்பந்து விளையாட வேண்டும் என்ற ஆர்வம் சஞ்சனாவுக்கும் ஏற்பட்டது. ஆனால், அவர் படித்த பள்ளியில் கால்பந்து அணி இல்லை. 'உனது பள்ளியில் தான் கால்பந்து அணியே இல்லையே; நீ எப்படி கால்பந்து விளையாடுவாய்' என்று சஞ்சனாவிடம் அவரது சகோதரர் கிண்டலாக கூறி உள்ளார். தனது ஆர்வத்தை ஏதாவது ஒரு விளையாட்டில் நிரூபித்து காட்டுவதாக கூறிய சஞ்சனா, பள்ளியில் கூடைப்பந்து அணியில் சேர்ந்து உள்ளார்.பள்ளி அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால், தேசிய அளவில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த 2017 ம் ஆண்டு 16 வயதுக்கு உட்பட்டோருக்கான, பெண்கள் கூடைப்பந்து அணியின் கேப்டனாக சஞ்சனா நியமிக்கப்பட்டார். சிறப்பாக விளையாடியதால், கோல்டன் ஈகிள் ஸ்காலர்ஷிப் அவருக்கு கிடைத்தது. இந்த உதவி தொகையை பெறும், இரண்டாவது இந்திய பெண் கூடைப்பந்து வீராங்கனை என்ற பெயரும் அவருக்கு கிடைத்தது.மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற போது, வடக்கு அரிசோனா பல்கலைக்கழகத்திற்கு விளையாடவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். சீனாவில் ஹாங்சோவில், 2022ல் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில், இந்திய பெண்கள் அணிக்காகவும் விளையாடினார். தற்போது வடக்கு அரிசோனா லம்பர்ஜாக்ஸ் அணிக்காக விளையாடுகிறார். சகோதரரிடம் தனது திறமையை நிரூபிக்க கூடைப்பந்து விளையாடிய சஞ்சனா, தற்போது உலகம் முழுதும் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை