இலங்கை - தனுஷ்கோடி கடல் நீந்தி கடந்த போலீஸ் அதிகாரி
கடலில் நீந்துவது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி தரக்கூடிய அனுபவம். கடலில் நீந்துவதன் மூலம் கடல்வாழ் உயிரினங்கள், நீரோட்டங்கள் பற்றி அறிய முடியும். கடலில் குளிப்பதும், நீந்துவதும் மக்களுக்கு பிடித்த விஷயத்தில் ஒன்று. கடலில் குளிக்கும் போது வயதானவர்கள் கூட குழந்தைகளாக மாறி விடுவர். போலீஸ் அதிகாரி ஒருவர், கடலில் 28 கி.மீ., துாரம் நீந்தி சாதனை படைத்து உள்ளார்.கர்நாடகாவின் வடமாவட்டமான ஹூப்பள்ளி ரூரல் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முருகேஷ் சன்னன்னவர், 44. இவர் கடந்த 18ம் தேதி இலங்கையில் இருந்து கடல் வழியாக தனுஷ்கோடி வரை 28 கி.மீ., துாரம், நீச்சல் அடித்து வந்து சாதனை படைத்து உள்ளார்.இதுபற்றி முருகேஷ் சன்னன்னவர் கூறியதாவது:காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் ஓட்டி, இதற்கு முன்பு சாதனை படைத்து உள்ளேன். இப்போது இலங்கையில் இருந்து ராமர் சேது பாலம் பகுதி வழியாக 28 கி.மீ., துாரம் கடலில் நீந்தி வந்து உள்ளேன். ராமர் சேது வழியாக வந்ததை பாக்கியமாக கருதுகிறேன்.கடந்த 17ம் தேதி காலை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு படகில் சென்றோம். இந்திய நீச்சல் கூட்டமைப்பு, மத்திய அரசின் அனுமதி பெற்று, சட்ட நடவடிக்கைகளை முடித்த பின், கடந்த 18ம் தேதி அதிகாலை 5:50 மணிக்கு கடலில் நீந்த துவங்கினேன். மதியம் 2:20 மணிக்கு தனுஷ்கோடி வந்து விட்டேன்.எனது குடும்பத்தினர், எப்போதும் என்னை ஊக்குவித்து வருகின்றனர். அடுத்த மாதம் இங்கிலாந்து - பிரான்ஸ் இடையிலான 36 கி.மீ., துாரம் உள்ள, ஆங்கில கால்வாயை நீந்தி கடக்க உள்ளேன். இது எனது நீண்ட நாள் கனவு. எனக்கு எப்போதும் மனைவி ஸ்வேதா உறுதுணையாக இருந்து உள்ளார். அவருக்கு எனது நன்றி.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -