புல்லாங்குழல் இசைத்தபடி பின்புறம் நீந்தி இளைஞர் சாதனை
நீச்சலில் பலரும் சாதனை செய்துள்ளனர் என்றாலும், மங்களூரு இளைஞர் உலக சாதனை செய்துள்ளார். அவரது சாதனை, கோல்டன் புக் ஆப் ஒர்ல்டு ரிக்கார்டு புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. தட்சிணகன்னடா மாவட்டம், மங்களூரு நகரில் வசிப்பவர் ரூபன் ஜேசன் மச்சாதோ, 25. இவர் நீச்சல் பயிற்சி பெற்று, பல போட்டிகளில் பங்கேற்றுள்ளார்; பதக்கங்கள் பெற்றுள்ளார். இதுவரை யாரும் செய்யாத சாதனையை, இவர் செய்து காண்பித்து அசத்தினார். இவரது சாதனை உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. மங்களூரு நகரின் செயின்ட் அலாய்சியஸ் கல்லுாரி நீச்சல் குளத்தில், நேற்று முன் தினம் நடந்த நீச்சல் போட்டியில் பங்கேற்றார். அவர் புல்லாங்குழல் இசைத்தபடி, பின்புறமாக நீந்தி சாதனை படைத்தார். அவர் புல்லாங்குழல் இசைத்தபடி, 300 மீட்டர் நீந்த வேண்டும் என, இலக்கு நிர்ணயித்திருந்தார். நீச்சல் குளத்தின் சுற்றளவு 150 மீட்டராகும். ரூபன் ஜேசன் மச்சாதோ, இரண்டு சுற்று நீந்தியிருந்தால் இலக்கை எட்டியிருக்கலாம். ஆனால் அவர் குழல் ஊதியபடியே, நீச்சல் குளத்தை ஐந்து முறை பின்புறமாக நீந்தினார். 700 மீட்டருக்கும் அதிகமான துாரம் நீந்தி, சாதனை செய்தார். அப்போது கோல்டன் புக் ஆப் ஒர்ல்டு ரிக்கார்டின் ஆசிய தலைவர் மனீஷ் பிஷ்னோய் இருந்தார். இவர், அரிய சாதனை செய்த ரூபன் ஜேசன் மச்சோதாவுக்கு, விருதும், பதக்கமும் வழங்கி கவுரவித்தார். மனீஷ் பிஷ்னோய் கூறுகையில், ''ரூபன் ஜேசன் மச்சாதோ, அபூர்வ சாதனை செய்துள்ளார். உலகில் யாரும் இது போன்ற சாதனையை செய்தது இல்லை. முதன் முறையாக, நீச்சல் குளத்தில் புல்லாங்குழல் ஊதியபடியே, பின்புறமாக நீந்தியுள்ளார்,'' என்றார் - நமது நிருபர் - .