புதுமையான ஸ்டப்பிங் இட்லி
தட்டு இட்லி, குட்டி இட்லி, காய்கறி இட்லி, ரவா இட்லி என, பலவிதமான இட்லிகள் உள்ளன. ஆனால் ஸ்டப்டு இட்லி சுவைத்துள்ளீர்களா. இல்லையென்றால் எப்படி செய்வது என, தெரிந்து கொள்ளுங்கள். இது புதுமையானது. மாறுபட்ட சுவையுடன் இருக்கும். செய்முறை
ஒரு கிண்ணத்தில் உளுந்தம் பருப்பை, இரண்டு, மூன்று மணி நேரம் ஊற விடவும். மற்றொரு கிண்ணத்தில் இட்லி ரவையை 20 நிமிடங்கள் நீரில் ஊற வையுங்கள். அதன்பின் உளுந்தம் பருப்பை, மிக்சியில் போட்டு மாவாக அரைத்துக் கொள்ளவும்.இந்த மாவை, ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். இதில் தண்ணீர் வடித்த ரவையை சேர்த்து நன்றாக கிளறவும். எட்டு மணி நேரம் மூடி வைக்கவும். காலையில், கலவை மாவில் உப்பு சேர்த்து, இட்லி மாவு பதத்தில் கிளறவும்.வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துக் கிளறவும். இதில் மஞ்சள், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு போட்டு கிளறவும். அதன்பின் பொடியாக நறுக்கிய கொத்துமல்லி, எலுமிச்சை ரசம் சேர்த்தால், அந்த கலவை தான் 'ஸ்டப்பிங்'.இட்லி தட்டில் சிறிதளவு மாவு ஊற்றி, அதன் மீது உருளைக்கிழங்கு ஸ்டப்பிங்கை, ஒரு ஸ்பூன் வைத்து, அதன் மீது மாவை ஊற்றி மூடி வேக வைக்கவும். 10 நிமிடம் குக்கரிலோ அல்லது ஸ்டீமரிலோ வேக வைத்தால், ஸ்டப்டு இட்லி தயார். உங்க வீட்டு குட்டீஸ்களுக்கு கொடுத்து பாருங்க... மளமளவென தட்டு காலியாகும். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி அல்லது புதினா சட்னி பொருத்தமாக இருக்கும்.