உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் / பனை விவசாயத்தில் சாதிக்கும் விவசாயி

பனை விவசாயத்தில் சாதிக்கும் விவசாயி

பெலகாவி மாவட்டம், சொன்னம்மா கிட்டூர் தாலுகாவில் உள்ளது ஹூனாஷிகட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள முதுமையான விவசாயி தான் சுரேஷ் பசப்பா ஹூப்பள்ளி,58.இவர் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார். இவர் சொந்தமாக 1 1/2 ஏக்கர் நிலம் வைத்து உள்ளார். இவருடைய நிலத்தில் கரும்பு, தட்டைப்பயிர் மற்றும் பல பயிர்களை விவசாயம் செய்து வந்தார். ஆனாலும், பெரிய அளவிலான லாபம் கிடைக்கவில்லை.இவரது மருமகன் ரமேஷ் ஹிதிமானி கடந்த 2005ம் ஆண்டு மலேசியாவிலிருந்து வேலை செய்து திரும்பினார். இவர் மலேசியாவில் இருந்த போது பனை வளர்ப்பு பற்றி அறிந்து கொண்டார்.

கிண்டல்

இதைப்பற்றி தன் மாமனார் சுரேஷிடம் கூறி உள்ளார். இதனை உன்னிப்பாக கவனித்த சுரேஷ், ஒரு முறை பனை விவசாயம் செய்து பார்க்கலாம் என நினைத்து உள்ளார். இதைப்பற்றி சக விவசாயிகளிடம் கூறிய போது, அவர்கள் கிண்டல் செய்து உள்ளனர். பனை விவசாயம் செய்வது சாத்தியமில்லை என கூறினர். இதனால், சுரேஷ் சற்று குழம்பி உள்ளார். இருப்பினும், தன் மருமகன் கொடுத்த ஊக்கத்தின் பேரில் விவசாய நிலத்தில் கடந்த 2006ம் ஆண்டு காலை வைத்தார். அப்போது, பனை வகையில் ஒன்றான டெனெரா வகை பனை மரங்களை நடத் துவங்கினார்.மொத்தம் 100 டெனெரா பனை மரக்கன்றுகளை நட்டார். இதனை கன்னும், கருத்துமாக பார்வையிட்டு வந்தார். பனை வளருவதற்கு நீண்ட காலம் தேவைப்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அதை சுரேஷூம் அறிந்திருந்தார்.பொறுமையாக ஒரு முனிவர் தவம் இருப்பது போல, நான்கு ஆண்டுகள் தவம் இருந்தார். இதற்கிடையில், நாலு பேர் நாலு விதமாக பேசும் குழுவினர், தங்கள் வாய்க்கு வந்தவை எல்லாம் சொல்லிவிட்டுச் சென்றனர்.இதனை பொருட்படுத்தாமல் விவசாயத்தில் கவனம் செலுத்தியவருக்கு, கடந்த 2010ம் ஆண்டு 6,000 கிலோ பனம்பழம் மகசூல் கிடைத்தது.அப்போது, ஏளனம் பேசிய அனைரும் வாய் பேச முடியாமல் சென்று உள்ளனர். அதிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் மகசூல் அதிகமானது. தற்போது, இது 24,000 கிலோவாக உயர்ந்து உள்ளது.இவர் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற பாமாயில் எண்ணெய் உற்பத்தி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளார். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 3 முதல் 4 லட்சம் பணம் சம்பாதிக்கிறார்.

நஷ்டம் கிடையாது

இந்நிறுவனம் ஒவ்வொரு மாதமும் பனை பழங்களை வாங்குகிறது. இந்த பனை பழங்களை வைத்து, பாமாயில் செய்கிறது. பிரதி மாதம் 10ம் தேதி பணம் வங்கி கணக்கிற்கு டெபாசிட் செய்யப்படுகிறது.அதுமட்டுமின்றி மத்திய அரசு 1 டன் பனை பழத்திற்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக 18,000 ரூபாய் நிர்ணயம் செய்து உள்ளது. இதன் மூலம் பெரிய அளவிலான நஷ்டத்தில் இருந்து தப்ப முடியும்.இதுகுறித்து சுரேஷ் பசப்பா கூறிய ஓரிரு வார்த்தைகள்:பனை மரங்களை வளரப்பதற்கு பெரிதாக செலவு ஆகவில்லை. ஆரம்பத்தில் உரங்களை பயன்படுத்தும் போது மட்டும் சில ஆயிரங்கள் செலவு ஆகின. ஆனால், தற்போது எந்த செலவும் இல்லை. அதுமட்டுமின்றி பெரிய அளவிலான பராமரிப்பு தேவைப்படாததால், கூலிக்கு ஆட்கள் வைக்க வேண்டிய அவசியமும் இல்லை.ஒரு பனை மரம் 30 ஆண்டுகள் மகசூல் தருகின்றன. தனியாளாக ஒரு ஏக்கரை கூட நிர்வகிக்க முடியும். முதலில் கரும்பு விவசாயத்தில் ஈடுபட்ட போது நஷ்டத்தில் இருந்தேன். பிறகு, பனை விவசாயத்திற்கு மாறிய பிறகு லாபம் கொட்டியது. இதை வைத்து சொந்தமாக வீடு கட்டி உள்ளேன். தற்போது, என்னை பார்த்து பலரும் பனை விவசாயம் செய்வதற்கு ஆர்வமாக உள்ளனர் என சிரித்தபடி கூறுகிறார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை