உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் / திரைப்படம் பார்ப்பதில் சக்கை போடு போடும் அனில்குமார்

திரைப்படம் பார்ப்பதில் சக்கை போடு போடும் அனில்குமார்

திரைப்படம் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகும். நேரம் கிடைக்கும்போது, பலரும் தங்கள் நண்பர்கள், குடும்பத்தினருடன் படம் பார்க்க, திரையரங்குக்கு செல்வர். கேபிள் டி.வி., வந்த பின், மக்கள் திரையரங்குக்கு செல்வது குறைந்தது; மொபைல் போன்கள் வந்த பின், அதிலேயே மூழ்கிப் போகின்றனர்; படம் பார்க்கின்றனர். மக்களை திரையரங்குக்கு வரவழைக்க படக்குழுவினர் படாதபாடுபடுகின்றனர். ஆனால் திரைப்பட ஆர்வலர்களும் இருக்கவே செய்கின்றனர். இவர்களில் அனில்குமாரும் ஒருவர். திரைப்படம் பார்ப்பதே இவரது பொழுதுபோக்கு. இதில் அவர் சாதனை செய்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 3,000 திரைப்படங்கள் தாவணகெரே நகரின் ஆஞ்சநேயா லே - அவுட்டில் வசிப்பவர் அனில்குமார். 50. இவர் ராம் அண்ட் கோ சதுக்கத்தில், சொந்தமாக கிப்ட் ஷாப் வைத்துள்ளார். திரைப்படம் பார்ப்பது இவரது பொழுதுபோக்காகும். எவ்வளவு வேலை இருந்தாலும், வாரந்தோறும் திரையரங்குக்கு சென்று படம் பார்ப்பது, இவரது வழக்கம். இதுவரை 3,000க்கும் மேற்பட்ட படங்கள் பார்த்துள்ளார். படம் முடிந்த பின் டிக்கெட்டை வீசியெறியாமல் சேகரித்து வைத்துள்ளார். அதுமட்டுமின்றி, தான் பார்த்த படங்களை விமர்சனம் செய்து எழுதி, கோப்பு தயாரித்து வருகிறார். 1990ம் ஆண்டு முதல் படம் பார்க்க துவங்கினார். அன்று முதல் வாரம் தவறாமல் படம் பார்க்கிறார். நேரம் கிடைக்காவிட்டால் கடையை மூடிவிட்டு திரையரங்குக்கு செல்கிறார். 2004ம் ஆண்டு முதல், டிக்கெட் சேகரித்து வருகிறார். படம் பார்க்க தனியாக செல்வது இல்லை. மகளையோ அல்லது நண்பர்களையோ தன் செலவில் அழைத்துச் செல்கிறார். தான் பார்த்த திரைப்படத்தின் பெயர், தேதி, ஆண்டு, மொழி, இயக்குனர், தயாரிப்பாளர், நாயகன், நாயகியின் பெயர், படத்தில் நடித்திருந்த மொத்த கலைஞர்களின் பெயர்களை, புத்தகத்தில் எழுதியுள்ளார். அதில் டிக்கெட்டை ஒட்டியுள்ளார். படத்துக்காக செய்த செலவையும் குறிப்பிட்டுள்ளார். கன்னடத்துடன் மற்ற மொழிகளின் படங்களையும் பார்த்துள்ளார். இதுகுறித்து, அனில்குமார் கூறியதாவது: நான், நடிகர் ராஜ்குமாரின் ரசிகன். அவர் நடித்த 90 சதவீதம் படங்களை பார்த்துள்ளேன். கஸ்துாரி நிவாசா, பங்காரத மனுஷ்யா எனக்கு மிகவும் பிடித்த படங்கள். திரையரங்குக்கு சென்று பார்ப்பதுடன், டி.வி.,யிலும் படம் பார்க்க தவறியது இல்லை. காந்தாரா சேப்டர் 1 படத்தை பார்த்தேன். வாழ்த்து அட்டைகள் எந்த படமாக இருந்தாலும், திரைக்கு வரும் முதல் நாளே பார்ப்பேன். உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கும் நோக்கில், டிக்கெட் சேகரித்து வருகிறேன். இதுவரை 3,000க்கும் மேற்பட்ட படங்களை திரையரங்குகளில் பார்த்துள்ளேன். திரைப்பட டிக்கெட்களுடன் பழைய வாழ்த்து அட்டைகள், கடிதங்களை பாதுகாத்து வைத்துள்ளேன். தாவணகெரேவில் உள்ள 'ஷிவாலி டாக்கீஸ்' எனக்கு மிகவும் பிடித்தமான திரையரங்காகும். படம் துவங்குவதற்கு முன்பே, உள்ளே சென்று விடுவேன். என் சொந்த செலவில், கிப்ட் ஷாப்பில் நண்பர்கள், சாதனை செய்தவர்களின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளேன். செலிபிரிட்டிகளை வரவழைத்து, பாராட்டு விழா நடத்தி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை