மேலும் செய்திகள்
24 கிராம பஞ்சாயத்துகளில் லோக் ஆயுக்தா சோதனை
10-Jun-2026
- நமது நிருபர் -: இன்றைய காலத்தில் கழிவு மேலாண்மை என்பது சவாலான காரியமாக உள்ளது. அப்படி இருக்கையில், உடுப்பியில் உள்ள வந்த்சே எனும் சிறிய கிராமம் கழிவு மேலாண்மையில் ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் முன்மாதிரியாக விளங்குகிறது. உடுப்பி மாவட்டம் வந்த்சே கிராம பஞ்சாயத்து, குப்பையை அறிவியல் பூர்வமாக மேலாண்மை செய்து, இயற்கை உரமாக மாற்றும் மகத்தான வேலையை செய்து வருகிறது. இந்நடைமுறை, 2017ம் ஆண்டு 'துாய்மை இந்தியா இயக்கத்தின்' கீழ் துவங்கப்பட்டது. கிராமத்தில் பொது இடங்களில் குப்பை கொட்டப்படுவதை தடுக்கவும், நீர் மாசுபடுவதை தடுக்கும் நோக்கிலும், திடக்கழிவு மேலாண்மை திட்டம் துவங்கப்பட்டது. திட்டம் துவங்கிய ஆரம்ப நாட்களில் குப்பையை மக்கும், மக்கா குப்பை என பிரித்து வழங்குவதில் கிராமத்தினர் தயக்கம் காட்டினர். அப்போது, பஞ்சாயத்து நிர்வாகத்தினர் கிராம மக்களிடம் கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதையடுத்து, கிராமத்தில் உள்ள 800க்கும் மேற்பட்ட வீடுகளிலும் குப்பையை பிரித்து, வீட்டின் வாசல் முன்பு வைக்கப்பட்டது. இதை மகளிர் சுய உதவி குழுவினர் சேகரித்தனர். கிராம பஞ்சாயத்து அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள உரம் தயாரிக்கும் இடத்திற்கு நேரடியாக, குப்பை கொண்டு செல்லப்படுகிறது. மக்கும் குப்பை, பெரிய தனித்தனி பிளாஸ்டிக் டப்பாக்களில் கொட்டப்படும். இந்த பெட்டிகளுக்குள் பூச்சிகள், புழுக்கள் ஏற்கனவே இருக்கும். இந்த பூச்சிகள் அவற்றின் எடையை விட அளவுக்கு அதிகமான குப்பையை உண்ணும். பின், அவை கழிவை வெளியேற்றும். இந்த கழிவுகளே இயற்கை உரமாக மாறுகிறது. நல்ல வருவாய் இவ்வகை உரங்கள் கோழிப்பண்ணை, மீன் பண்ணைகளுக்கு அதிகளவு பயன்படுகின்றன. இந்த உரத்தை, 1 கிலோ 100 முதல், 200 ரூபாய்க்கு விற்று, வந்த்சே கிராம பஞ்சாயத்து நல்ல வருவாய் ஈட்டி வருகிறது. இதன் மூலம் மாதம் 55,000 ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டப்படுகிறது. மேலும், குப்பையை வீடு, வீடாக சேகரிப்பதற்கு மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒன்றுக்கும் உதவாத குப்பை மூலம் மாதம் 50,000 ரூபாய்க்கு மேல் வந்த்சே கிராம பஞ்சாயத்து வருமானம் ஈட்டுகிறது. இது மற்ற கிராம பஞ்சாயத்துகளுக்கும் மட்டுமின்றி ஒட்டுமொத்த மாநிலத்திற்குமே முன்மாதிரியாக திகழ்கிறது.
10-Jun-2026