முந்திரி பதப்படுத்துதலின் ராஜா மங்களூரு
: முந்திரி பதப்படுத்தும் தொழிலில் உலக அளவில் பிரபலமானது மங்களூரு. இந்த தொழிலில் நுாற்றாண்டில் மங்களூரு காலடி எடுத்து வைத்து உள்ளது. கர்நாடகாவில் முந்திரிக்கு பிரபலமான நகரங்களில் மங்களூரும் ஒன்று. உலக அரங்கில் இந்த முந்திரிகளுக்கு தனி மதிப்பு இருக்கிறது. இங்கு முந்திரி வியாபாரம் மிகப்பெரிய அளவு நடக்கிறது. ஆண்டுதோறும் 5 லட்சம் டன் முந்திரி பதப்படுத்துதல் நடக்கிறது. இன்றும் ஆப்பிரிக்கா, வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து வரக்கூடிய முந்திரிகள் பதப்படுத்தப்படுகிறது. 10 சதவீதம் மட்டுமே உள்ளூரில் விளைவிக்கப்படும் முந்திரிகள், மீதமுள்ள 90 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடியவையே. இந்த பதப்படுத்தும் தொழில் எப்படி மங்களூரில் துவங்கியது என்பதை வரலாற்றின் வழியே சென்று தெரிந்து கொள்ளலாம். வரலாறு இந்தியாவில் முந்திரி பதப்படுத்தும் தொழில் 1920ல் பொருளாதார ரீதியாக துவங்கியது. முதல் முந்திரி தொழிற்சாலை 1925ல் மங்களூரில் பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டது. இது பிரிட்டீஷ் நிறுவனமான 'பியர்ஸ் லெஸ்லி இந்தியா லிமிடெட்' நிறுவனத்தால் நிறுவப்பட்டது. 1940ல் ஐந்து தொழிற்சாலைகள் ஆக அதிகரித்தது. சுதந்திரத்திற்கு பின், 1955ல் கர்நாடக முந்திரி உற்பத்தியாளர்கள் சங்கம் நிறுவப்பட்டது. 1978ல் கர்நாடக முந்திரி மேம்பாட்டு கழகம் உருவாக்கப்பட்டது. இப்படியே முந்திரி பதப்படுத்தும் தொழில் வேகமாக வளர்ந்தது. கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களிலும் பரவியது. பெண்களுக்கு அதிகாரம் இந்த தொழிற்சாலைகளில் 95 சதவீதம் பேர் பெண்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கான வேலை வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இவர்கள் வேலைக்காக நகரங்களுக்கு வரத்தேவையில்லை. இந்தியாவில் பதப்படுத்தப்படும் முந்திரிகளில் 25 சதவீதம் கர்நாடகாவின் பங்கு உள்ளது. உலக அளவில் முந்திரி பதப்படுத்துதலில் நம் நாட்டின் பங்கு இன்றியமையாதது. இத்தனை சிறப்பு வாய்ந்த முந்திரி வியாபாரத்தில் வித்தை காட்டும் கடலோர மாவட்டங்கள் நம் கர்நாடாகவில் இருப்பது நமக்கெல்லாம் பெருமை. இந்த சாதனைகள் குறித்து கர்நாடக முந்திரி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஏ.கே.ராவ் கூறியதாவது: முந்திரி விளைவிப்பது, பதப்படுத்துதலில் மங்களூரு உலக அளவில் பிரபலமாகும். ஆப்பிரிக்க நாடுகள் தங்கள் நாடுகளில் விளைவிக்கப்படும் முந்திரியில் பாதியளவை அவர்கள் நாடுகளிலே பதப்படுத்த துவங்கினால் மட்டுமே நமக்கு பாதிப்பு ஏற்படும். அதுவரை, நமக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. பெண்களுக்கு அதிகாரம், வேலை வாய்ப்பு, ஊதியம் போன்றவையே முந்திரிகளே வழங்குகிறது என்பதை மறுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார் - நமது நிருபர் -.