மங்களூரில் ஒரே பள்ளியில் ஏழு இரட்டையர்
பொதுவாக ஒரு இடத்தில் இரட்டையர்களை பார்ப்பது அபூர்வம். ஆனால் மங்களூரில் உள்ள ஒரு பள்ளியில் ஏழு இரட்டையர்கள் படிக்கின்றனர். தட்சிணகன்னடா மாவட்டம், மங்களூரு புறநகரின் வாமஞ்சூர் கிராமத்தில், அரசு தொடக்க பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் ஒரு இரட்டையர், இரண்டாம் வகுப்பில் இரண்டு இரட்டையர், மூன்றாம் வகுப்பில் ஒரு இரட்டையர், ஐந்தாம் வகுப்பில் இரண்டு இரட்டையர், ஆறாம் வகுப்பில் ஒரு இரட்டையர் உள்ளனர். இவர்களில் ஒரு இரட்டையர் மட்டும், வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மற்ற ஆறு இரட்டையரும் உள்ளூரை சேர்ந்தவர்கள். ஒன்றாம் வகுப்பில், கங்கா - ஜமுனா, இரண்டாம் வகுப்பில், சாக்ஷி - ராஜேஸ்வரி, திஷா - தித்யா, மூன்றாம் வகுப்பில் ஜுவா - ஜிமாம், ஐந்தாவது வகுப்பில் நிதி - நிஷா, நிஷான் - நிதிஷா, ஆறாம் வகுப்பில் பிரணாம் - பிரதம் படிக்கின்றனர். இவர்களில் ஜுவா சிறுமி, ஜமாம் சிறுவன், நிஷான் சிறுவன், நிதிஷா சிறுமி. மற்ற இரட்டையர் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள். இரட்டை மாணவர்களை அடையாளம் காண்பதில், ஆசிரியர்களும் சக மாணவர்களும் குழம்புகின்றனர்; பெயரை மாற்றி குறிப்பிடுகின்றனர். இது குறித்து ஆசிரியை கிரேட்டா குடினா கூறியதாவது: பள்ளிகளில் ஒரு இரட்டையர் இருப்பது சகஜம். ஆனால் எங்கள் பள்ளியில் ஏழு இரட்டையர்கள் உள்ளனர். ஒரே விதமான தோற்றத்தில் இருப்பதால், இவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது கஷ்டமாக உள்ளது. ஒருவரை அழைக்க வேண்டுமானால், தவறி மற்றொருவரை அழைக்கிறோம். இது போன்ற குழப்பத்தை தவிர்க்க, இருவரின் பெயரை சேர்த்து அழைக்கிறோம். ஒருவர் தவறு செய்தால், வேறு ஒருவருக்கு திட்டு கிடைக்கிறது. எங்கள் பள்ளியில் ஏழு இரட்டையர் படிப்பது, மகிழ்ச்சியான விஷயம். இவர்கள் ஒருவரை விட்டு கொடுக்காமல், ஒற்றுமையாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -