உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் / இலை, தழைகளை தின்று உயிர் வாழும் அதிசய வாலிபர்

இலை, தழைகளை தின்று உயிர் வாழும் அதிசய வாலிபர்

பல ஆண்டுக்கு முன்பு, ஊரை விட்டு வந்த இளைஞர் இலை, தழைகளை சாப்பிட்டு வனத்தில் வாழ்க்கை நடத்துகிறார், இலை, தழைகளை தவிர வேறு எதையும் சாப்பிடுவது இல்லை. ஆரோக்கியத்தில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. இவர் மருத்துவ உலகத்துக்கு சவாலாக இருக்கிறார். பெலகாவி மாவட்டம், சவதத்தி தாலுகாவின், உகரகோளா கிராமத்தை சேர்ந்தவர் புடன் மல்லிக் ஹொசமனி, 34. இவர் என்ன காரணத்தாலோ, பத்து ஆண்டுகளுக்கு முன்பு, வீட்டை விட்டு வெளியேறினார். உகரகோளா புறநகரில் உள்ள சித்தனகொள்ளா மலைக்கு வந்தார். அதன்பின்வீட்டுக்கு செல்லாமல் மலையிலேயே வசித்த ஆரம்பித்தார். மலை மீது சிறிய வீடு கட்டிக்கொண்டு தனியாக வாழ்கிறார். மலையில் பழங்கால குளம் உள்ளது. கர்நாடக வட மாவட்டங்களின், காவல் தெய்வமாக கருதப்படும் எல்லம்மா தேவியின் ஏழு குளங்களில், இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. மலையில் அதிக அளவில் வளர்ந்துள்ள, பலவிதமான இலை, தழைகள், கீரைகளை தின்று புடன் மல்லிக் வாழ்கிறார். இதைத்தவிர வேறு எதையும் சாப்பிடுவது இல்லை. தினமும் யோகா செய்கிறார். சிக்ஸ் பேக் வைத்து திடமாக இருக்கிறார். இவர் மருத்துவ உலகுக்கே ஆச்சர்யமாக விளங்குகிறார். புடன் மல்லிக் கூறியதாவது: தினமும் இரவு 11:00 மணிக்கு உறங்குகிறேன், அதிகாலை 3:00 மணிக்கு எழுவேன். ஒரு மணி நேரம் யோகா செய்வேன். அதன்பின் இரண்டு பிளேட் அளவில் கீரைகள் சாப்பிடுவேன், மலையில் பாயும் நீரை குடிப்பேன். இங்கேயே குளித்து, சிறிது நேரம் ஓய்வெடுப்பேன். மதியம் மீண்டும் கீரையை பறித்து சாப்பிடுவேன். இரவு 8:00 மணிக்கு மீண்டும் ஒரு மணி நேரம் யோகா செய்வேன். 9:00 மணிக்கு கீரையை பறித்து சாப்பிடுவேன். தினமும் நான்கரை மணி நேரம் மட்டுமே, நான் உறங்குவேன். நான் வீட்டை விட்டு வெளியேறி, மலைக்கு வந்தபோது குரங்குகள் கீரைகளை சாப்பிடுவதை கவனித்தேன். நாமும் ஏன் சாப்பிட கூடாது என, நினைத்தேன். அன்று முதல் இதை சாப்பிட ஆரம்பித்தேன். முதல் முறை சாப்பிடும்போது, கசப்பாக இருந்தது. அதன்பின் பழகிவிட்டது. இங்கு 80க்கும் மேற்பட்ட வகையான கீரைகள் உள்ளன. குரங்குகள், ஆடுகள் தின்னும் தழைகளை சாப்பிட்டு, நானும் வலுவாகஇருக்கறேன். கடந்த 10 ஆண்டுகளாக இதுவே என் உணவாகும். எனக்கு காய்ச் சல், சளி என, எந்த பிரச்னையும் ஏற்பட்டதில்லை. காலில் இரும்பு குத்தியபோது, மூச்சுத்திணறல் ஏற்பட்டபோது, முட்புதரில் விழுந்தபோது என, மூன்று முறை மட்டும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றேன். நான் சிறுவனாக இருந்தபோது, என்னால் வீட்டிலோ, ஊரிலோ இருக்க முடியவில்லை. பள்ளிக்கும் சென்றது இல்லை. பகல் முழுவதும் இந்த மலைக்கு வந்து படுத்துக் கொள்வேன். இரவானால் வீட்டுக்கு செல்வேன். அதன்பின் நிரந்தரமாக மலையில் தங்கிவிட்டேன். 10 ஆண்டுக்கு முன்பு, கடலைக்காய், பழங்கள், சிக்கன், மட்டன் சாப்பிடுவேன். பால் குடிப்பேன். ஆனால் இப்போது என் முன்னே, எப்படிப்பட்ட உணவை வைத்தாலும் சாப்பிடமாட்டேன். கீரையில் உள்ள சத்துகள், வேறு எதிலும் இல்லை. தினமும் காலை மற்றும் இரவில் இரண்டு மணி நேரம், சக்ராசனம், வஜ்ராசனம், சூரிய நமஸ்காரம் உட்பட, 50க்கும் மேற்பட்ட யோகாசனங்கள் செய்வேன். நாள் முழுதும் மலையில் சுற்றுவேன். தினமும் மொபைல் போனில் கருட புராணம், சிவ புராணம் படிப்பேன். பணத்தேவை ஏற்படும்போது, கூலி வேலைக்கு செல்வேன். எனக்கு இந்த மலையே சொர்க்கம். எனக்கு பயமோ, ஆசைகளோ இல்லை. வாழ்க்கை திருப்தி அளித்துள்ளது. என் தந்தை இறந்துவிட்டார். தாய் பெங்களூரில் என் சகோதரருடன் வசிக்கிறார். என்னுடன் பிறந்த அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. நான் தனியாக வாழ விரும்புவதால், திருமணம் செய்யமாட்டேன். எனக்கு சத்தம் பிடிக்காது. அதிகம் பேசமாட்டேன். இவ்வாறு அவர் கூறினார். மருத்துவ வல்லுநர்கள் கூறியதாவது: இலை, தழைகளை தின்று ஜீரணித்துக் கொள்ளும் சக்தி, விலங்குகள், பறவைகளுக்கு மட்டுமே உள்ளது. ஆனால் புடன் மல்லிக் பலவிதமான இலை, தழைகளை தின்று உயிர் வாழ்வது, மருத்துவ உலகத்துக்கு ஆச்சர்யம்தான். அவரை அறிவியல் ரீதியில் ஆராய்ச்சி செய்ய வேண்டியது அவசியம். அவரிடம் உள்ள அபூர்வமான சக்தியை, வெளி உலகுக்கு தெரிவிக்க வேண்டும். உகரகோளா மலையில், ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட மரம், செடி, கொடிகள் உள்ளன. ஆனால் இதை பற்றி புடன் மல்லிக்குக்கு சரியாக தெரியாது. எனவே அவரை ஆராய்ச்சிக்கு உட்படுத்தினால், அந்த மலையில் அபூவமான மருத்துவ மூலிகைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !