உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் /  இரவில் டிஜிட்டல் சாதனங்களுக்கு தடை போடும் அதிசய கிராமம்

 இரவில் டிஜிட்டல் சாதனங்களுக்கு தடை போடும் அதிசய கிராமம்

இது, டிஜிட்டல் யுகம். ஒரு காலத்தில் அம்மாக்கள், தங்களின் குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டினர். இப்போது, குழந்தைகளின் கையில் மொபைல் போனை கொடுத்தால் மட்டுமே உணவு சாப்பிடுவேன் என, பிடிவாதம் பிடிக்கும் சூழ்நிலை உள்ளது. பல வீடுகளில், மொபைல் போனில் கார்ட்டூன் பார்த்தபடி, சிறார்கள் உணவு சாப்பிடுவதை காணலாம். பல் முளைக்காத பச்சிளம் குழந்தை முதல், பல் போன முதியவர்கள் வரை, காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை, ஒவ்வொரு விநாடியும் மொபைல் போனிலேயே பொழுதை போக்குகின்றனர். மொபைல் போன், இவர்களின் பிரிக்க முடியாத அங்கமாக மாறியுள்ளது. குடும்ப உறுப்பினர்கள் பேசிக்கொள்வதே குறைந்து விட்டது. அனைவரின் வாழ்க்கையும் மொபைல் போனுக்குள் அடங்கியுள்ளது. பஸ் பயணம், ரயில் பயணம் செய்யும் போதும், மொபைல் போனில் வீடியோக்கள் பார்ப்பவர்களே அதிகம். அதேபோல பெண்களும், 'டிவி' தொடர்களில் காலம் கடத்துகின்றனர். இது, சிறார்களின் கல்வியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நகர்ப்புறங்கள் மட்டுமின்றி, கிராமங்களிலும் இதே சூழ்நிலை உள்ளது. ஆனால், மக்களை மொபைல் போன் பிடியில் இருந்து விடுவிக்க, ஹலகா கிராமம் புதிய வழியை கையாள்கிறது. அது, நல்ல பலனையும் அளித்துள்ளது. பெலகாவி மாவட்டம், ஹலகா கிராமத்திலும் மக்கள் மொபைல் போனுக்கு அடிமையாக இருந்தனர். அதிலிருந்து, அவர்களை மீட்க கிராம பஞ்சாயத்து புதிய கட்டுப்பாட்டை விதித்தது. கடந்த டிசம்பர், 17 முதல், இந்தக் கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. இரவு, 7:00 முதல், 9:00 மணி வரை, மொபைல் போன் உட்பட, எந்த விதமான டிஜிட்டல் சாதனங்களையும், கிராமத்தினர் பயன்படுத்தக் கூடாது என்பதே, அந்த தடை. சரியாக இரவு, 7:00 மணிக்கு கிராம பஞ்சாயத்து ஊழியர் சைரன் ஒலிக்க வைப்பார். அதன்பின், இரண்டு மணி நேரம், சிறார்கள் கட்டாயமாக வீட்டு பாடங்களை படிக்க வேண்டும். அவர்களுக்கு பெற்றோர் உதவ வேண்டும். குடும்பத்தினர் உறவினர்களுடன் பேசி சுக, துக்கங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். புத்தகங்கள் படிப்பது, பிரார்த்தனை செய்வது, கலை நிகழ்ச்சிகளை நடத்தலாம். இரண்டு மணி நேரமும், மொபைல் போன், 'டிவி' மற்றும் லேப்டாப் பயன்படுத்தக் கூடாது. கிராம பஞ்சாயத்தின் புதிய முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. மக்களின் ஒத்துழைப்பும் கிடைத்து உள்ளது. இது குறித்து, கிராம பஞ்சாயத்து கவுன்சிலர் சதானந்தபிளகோஜி கூறியதாவது: கிராமத்தில் சாக்கடையை சுத்தம் செய்வது, குடிநீர் விநியோகிப்பது, அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது, சாலை அமைப்பது மட்டுமே, கிராம பஞ்சாயத்தின் கடமை அல்ல. ஊரில் சிறுவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கு என்ன செய்ய வேண்டும் என, ஆலோசித்து செயல்படுத்துவதும் எங்களின் கடமையே. மஹாராஷ்டிராவின், அக்ரனா தொளகாவ் கிராமத்தை முன்னோடியாக கொண்டு, 'டிஜிட்டல் டிடாக்ட்' திட்டத்தை செயல்படுத்தினோம். அளவுக்கு அதிகமாக டிஜிட்டல் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இரவு, 7:00 முதல், 9:00 மணி வரை அதிகமான, 'டிவி' தொடர்கள் ஒளிபரப்பாகின்றன. இது, சிறார்களின் கல்விக்கு இடையூறாக உள்ளது. சிறார்களும் மொபைல் போனில் பொழுது போக்குகின்றனர். எப்போது விருப்பமோ அப்போது படிக்கின்றனர். இதை மனதில் கொண்டு, இரண்டு மணி நேரம் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு சைரன் ஒலித்ததும், மொபைல் போன், 'டிவி'யை ஆப் செய்ய வேண்டும். கர்நாடகாவிலேயே, 'டிஜிட்டல் டிடாக்ட்' திட்டத்தை செயல்படுத்திய முதல் கிராமம் என்ற பெருமை, எங்களின் கிராமத்துக்கு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார் - நமது நிருபர் - .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை