- நமது நிருபர் -: மங்களூரு பிஜர் பகுதியை சேர்ந்தவர் சோஹன் ராய், 23. இவர் பொறியியல் கல்லுாரியில் சேர்ந்து குடும்ப சூழலால், பாதியிலேயே படிப்பை விட்டார். புதிதாக எதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம், சிறுவயதில் இருந்தே இருந்து வந்தது. இந்த வரிசையில், மருத்துவர்கள் உபயோகிக்கும் ஸ்டெதாஸ்கோப்பை பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்பை கண்டறிந்து உள்ளார். இந்த ஸ்டெதாஸ்கோபில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி உள்ளார். ஸ்டெதாஸ்கோபின் காது பகுதியை தனியாக கட் செய்து, அதில் மைக்ரோசிப், மின்கலம் பொருத்தி ஒரு மொபைல் போன் வடிவமைத்து உள்ளார். இந்த கருவியை வயிற்றுப்பகுதிக்கு அருகில் வைத்து விட வேண்டும். வயிற்றில் இருந்து வரும் சத்தத்தின் மூலம் பசியாக உள்ளாரா என்பதை கருவி கண்டுபிடித்து விடும். பின், தானாக அவரது மொபைல் போன் மூலம் சொமேட்டா செயலியில் உணவை ஆர்டர் செய்துவிடும். கிழமை வாரியாக தனக்கு பிடித்தமான உணவை ஆர்டர் செய்யும் வகையில் கருவியையும் வடிவமைத்து உள்ளார். இந்த கருவிக்கு 'மாம்' என ஆங்கிலத்தில் பெயரிட்டு உள்ளார். இவரது, கண்டுபிடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். இதனால், பல முன்னணி தொழில் நிறுவனங்களும், அவரை தங்கள் நிறுவனத்தில் பணியாற்ற வரவேண்டும் படி அழைப்பு விடுத்துள்ளன. இது குறித்து, அவர் கூறியதாவது:
இந்த கருவியை கடினமான முயற்சிகளுக்கு பின் கண்டறிந்தேன். நான் பல வேலைகள் செய்வதால், சாப்பிடுவதற்கே மறந்து விடுகிறேன். இதனால், எனக்கு நினைவூட்டும் வகையிலும், தானாகவே உணவை ஆர்டர் செய்யும் வகையிலும் ஒரு கருவியை கண்டறிந்தேன். இதற்கு 'மாம்' என பெயரிட்டதற்கு காரணம், அம்மா எப்படி சரியான நேரத்திற்கு கட்டாயப்படுத்தி உணவு உண்ண வைப்பாரோ, அதுபோல இந்த கருவியும் செய்யும். இந்த கருவி 'ஒயர்லஸ் டிவைஸ்' மூலம் இயங்குகிறது. கம்ப்யூட்டரில் புரோகிராமிங் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம், வயிற்றின் சத்தத்தை வைத்து, பசியாக உள்ளேன் என்பதை கண்டறிந்து தானாக உணவு ஆர்டர் செய்ய முடியும். பலரது பாராட்டுகளுக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.