பிறந்த குழந்தைக்கு முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் தருவது மிக முக்கியமானது. ஆனால் குழந்தையைப் பெற்றெடுத்த இளம்தாய்கள் சிலருக்கு போதியளவு தாய்ப்பால் சுரக்காததால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அப்படியே தாய்ப்பால் சுரந்தாலும் ஆரோக்கியமாக இருக்குமா? என பல சந்தேகங்கள் எழுகின்றன. பிறந்த குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் தாய்ப்பாலில் மட்டுமே நிரம்பியுள்ளது; வேறு எந்த உணவும் நிகர் ஆகாது; தரவும் முடியாது. ஊட்டச்சத்தான உணவுகளை சாப்பிடுவதால் தாய் ஆரோக்கியமாக இருப்பதுடன், குழந்தைக்கும் தேவையான அளவு சத்தான பால் இயற்கையாகவே சுரக்கும். எனவே இளம் தாய்கள் சாப்பிட வேண்டிய சில உணவு வகைகள்...
நார்ச்சத்து நிறைந்த கீரை வகைகள், கேரட், பீட்ரூட் மற்றும் நீர்ச்சத்துள்ள சுரைக்காய், முள்ளங்கி போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் பால் சுரப்பு சீராக இருக்கும். மலச்சிக்கல் பிரச்னையையும் தடுக்கலாம். இதனால் குழந்தைகளுக்கும் செரிமானப் பிரச்னை தவிர்க்கப்படுகிறது. பொன்னாங்கன்னி, முருங்கைக்கீரையில் உள்ள வைட்டமின், இரும்புச்சத்து போன்றவை பால் சுரப்பை அதிகரிக்கிறது.
பேரீச்சம், அத்திப்பழம் போன்றவற்றை தினமும் சாப்பிட்டு வர, பால் சுரக்கும் தன்மை அதிகரிக்கும். இதிலுள்ள இரும்புச்சத்து தாய்ப்பாலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்; குழந்தையின் ஆரோக்கியமும் மேம்படும்.
பூண்டை தினமும் உணவில் அதிகளவில் சேர்த்து வர பால் சுரப்பு அதிகரிக்கும்; உடம்பில் உள்ள கெட்டக் கொழுப்புகள் குறையும். ஒரு கடாயில் பொடியாக நறுக்கிய பூண்டை நெய் அல்லது எண்ணெய் விட்டு நன்றாக வதக்கி சிறிதளவு அரிசி சாப்பாட்டில் பிசைந்து சாப்பிடலாம். அல்லது பாலுடன் சேர்த்து பூண்டு மசியுமளவுக்கு நன்றாக கொதிக்க விட்டு, தினமும் குடித்து வர பால் வற்றுதல் பிரச்னையே வராது.
வெந்தயம் ஊற வைத்த தண்ணீரையோ அல்லது வெந்தயக் கஞ்சியையோ குடித்தால் பால் சுரப்பின் தன்மை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் கருப்பையை சுருங்கச் செய்து, கருப்பையில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது.
முளைகட்டிய பயறு வகைகள், சிறுதானிய வகை உணவுகளை சாப்பிடலாம். இது தாய், குழந்தை இருவருக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதனால் இயற்கையாகவே தாய்ப்பாலும் சீராக சுரக்கும்.
இளம் தாய்கள் அசைவப் பிரியர்கள் என்றால் இருக்கவே இருக்கு பால் சுறா மீன் மற்றும் பால் சுறா கருவாடு. இதை சாப்பிடுவதால் தாய்ப்பால் சுரத்தல் அதிகரிக்கும்.
பால் கொடுக்கும் இளம் தாய்கள் அடிக்கடி தண்ணீர் குடிப்பது அவசியம். குழந்தைக்கு பால் கொடுக்கும் போதோ அல்லது கொடுத்த பின்னரோ கட்டாயமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
உண்ணும் உணவு ஒரு பக்கம் இருந்தாலும் பால் கொடுப்பதற்கு முன்னர், மார்பகத்தை கைகளால் நன்றாக அழுத்தி மசாஜ் செய்வது போன்று தேய்க்கவும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரித்து பால் எளிதாக சுரக்கும். எனவே ஒவ்வொரு முறை பால் தரும் முன்பும் மார்பகங்களை நன்றாக தேய்த்தும், கசக்கியும் விட்டே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுங்கள். தொடர்ந்து ஓரிரு வாரங்கள் பால் சரிவர சுரக்காமல் சிரமப்பட்டால் கட்டாயமாக டாக்டரை கலந்தாலோசிக்க வேண்டும்.