மழைக்காலத்தில் வரும் சளி, மூக்கு வடிதலை ஆரம்பதிலேயே கண்டுக்கொள்ளவில்லை என்றால் அது மார்பு சளியாக உருவாகக்கூடும். இதனால் கபம், மூச்சுக் குழாய் அலர்ஜி, தொடர் இருமல் போன்ற பல பிரச்னைகள் ஏற்படும். பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் வெளியே வரும் சளியை கொண்டு மார்பு சளி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். இதனால் தான் என்னவோ, மூக்கில் இருந்து சளி வரும்போதே அதை சிந்தி வெளியேற்ற வேண்டும் என வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவார்கள். மார்பு சளி அதிகமாகும் போது வறட்டு இருமல், மூக்கடைப்பு, மூச்சு விடுதலில் சிரமம் போன்றவை இருக்கும். இதனால் இரவு தூங்குவது மிகவும் கஷ்டமாக இருக்கும். சாதாரண வைரஸ் தொற்றால் வரும் சளியை மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். சில சமயம், அதன் தீவிரம் அதிகமாகி நுரையீரலில் சுவாசப் பாதையில் செல்லக்கூடும். இவை தான் நாள்பட நெஞ்சுக்கூட்டில் தேங்கி மார்புசளியாக மாறுகிறது. இந்த பருவக்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானவர்கள் மார்பு சளியால் அவதிப்படுகிறார்கள். இதை எளிதாக நீக்கும் சில கை வைத்திய முறைகள் இப்போது தெரிந்துக்கொள்வோம்:ஒத்தடம்:
முதலில் தேங்காய் எண்ணெய்யை சூடு செய்து அதில் கற்பூரம் சேர்த்து, அந்த எண்ணையை நெஞ்சில் தடவ வேண்டும். பின் தோசை கல்லில் துணி வைத்து அதில் சூடு ஏற்றி ஒத்தடம் கொடுக்க வேண்டும். தொடர்ந்து இப்படி செய்து வர நெஞ்சு சளி குணமாகும். சற்று சரியானதும் இதை விட்டுவிடாமல் தொடர்ந்து தடவி வந்தால் நாள் பட்ட நெஞ்சு சளியையும் எளிதில் குணமாகிவிடும். நீரெற்றமாக இருக்கவும்:
வெது வெதுப்பான நீரை தொடர்ந்து குடித்து வர மார்பு சளி சிறிது சிறிதாக கரைந்து போகும். மேலும் தொண்டையில் சளி சேர்வதைத் தடுக்கும். தினமும் 2.5 முதல் 3.5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஹெர்பல் டீ, சூப் அடிக்கடி குடிக்கவும். சுடு நீரில் எலுமிச்சை சாரை விட்டு நன்கு கலக்கி பின் தேன் சிறிது சேர்த்து கலக்கி குடித்தால் நெஞ்சு சளி கரையும். மிளகுத் தூளையும், மஞ்சள் பாலுடன் கலந்து ஒரு வாரம் குடித்து வர மார்பு சளி கரையும். இப்படி சூடாக குடிப்பதால் அந்த வெப்பம் சளியை மெல்லிதாக்கி, வெளியேற்ற உதவும். மேலும் தொண்டை கரகரப்புக்கு நல்ல நிவாரணமாக இருக்கும்.
உப்பு நீர்:
உப்பு நீர் கொண்டு கொப்பளிப்பது தொண்டையில் சளியை உடைத்து, எரிச்சலூட்டும் ஒவ்வாமை, பாக்டீரியா, பூஞ்சை போன்றவற்றை முளையிலேயே அழிக்கும். மேலும் தொண்டை வறட்சி, அலர்ஜி, சளி, சைனஸ் தொற்று போன்ற பிரச்னைகளை குணமாக்க உதவும். சளியின் ஆரம்பக்கட்டத்தில் இப்படி செய்வதால், மார்பு சளி உருவாகமல் தடுக்கப்படும். சூடு தாங்கும் அளவிற்கு ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்து அதில் 2 முதல் 3 தேக்கரண்டி உப்பு சேர்க்கவும். அதை வாயில் போட்டு, சில நொடிகள் வாய் கொப்பளிக்கவும். சளிபிடிக்கும் போது இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கும் ஒரு முறை இப்படி செய்யலாம். இதனால் சுவாசக்குழாயில் ஏற்படும் நோய்த் தொற்றுகளைத் தடுக்கவும் உதவும்.
ஆவி பிடித்தல்:
நல்ல சூடான நீரில் ஆவி பிடிக்கும்போது வெப்பமான ஆவி, நாசிகள் வழியாக நுரையீரலைச் சென்றடைகிறது. இது நுரையீரல் பாதையில் உள்ள கிருமிகளை அழித்து, மூக்கடைப்பு, மார்பு சளி உள்ளிட்ட சுவாசக் கோளாறுகளை நீக்குகிறது. யூகலிப்டஸ் எண்ணெய், நொச்சி இலை, மஞ்சள், மிளகு, எலுமிச்சை, இஞ்சி, துளசி,வேப்பிலை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை போட்டு ஆவி பிடிக்கலாம். இரவில் நல்ல தூக்கம் வரும்.