வேக நடையா, மெல்லோட்டமா... எது சிறந்தது?
காலை மெல்லோட்டம் உடலுக்கு பலவித நன்மைகளை அளிப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் உடற்பருமனானவர்கள் பலர் மெல்லோட்டம் ஓட மிகுந்த சிரமத்துக்குள்ளாவர். இன்று வெறும் 10 அடி தூரம் மெல்லோட்டம் செய்தாலே பலருக்கு மூச்சு வாங்கும், வியர்த்துக்கொட்டும். இதனால் வேக நடையே சிறந்தது என எண்ணி பலர் கை, கால்களை வீசியபடி வேக நடை பயில்வர். வேகநடை, ஓட இயலாத முதியோர் பலருக்கு உதவும் ஓர் உடற்பயிற்சியாக உள்ளது. ஆனால் மெல்லோட்டமே உடல் எடை குறைக்க சிறந்த வழி என்போரும் உண்டு. காலை நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி செய்வோர் வேக நடை, மெல்லோட்டம் இடையே உள்ள வேறுபாட்டை அறிவது நல்லது. நடக்கும் வேகத்தில் மெல்லோட்டம் செய்வது, அதாவது நிமிடத்துக்கு 50 அடி எடுத்து வைத்து மெல்லோட்டம் செய்வது உடல் எடையை வேகமாகக் குறைக்க உதவும் ஓர் உடற்பயிற்சி முறை. கட்டுடல் கொண்டவர்கள், விளையாட்டு வீரர்கள் இதுபோல தினமும் காலை பல கி.மீ., மெல்லோட்டம் செய்வர். இது இதயத்துடிப்பை அதிகரித்து, வியர்வையை வெளியேற்றி மன அழுத்தத்தைக் குறைக்கும். ஆனால் மெல்லோட்டம் கால்களின் தசை நாரில் தசைப்பிடிப்பு, காயம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இளைஞர்கள், நடுத்தர வயதினர் மெல்லோட்டம் ஓடும்போது சரியான வேகத்தில் ஓடுவது நல்லது.