இயற்கை எழில் கொஞ்சும் காளி நதி
உத்தரகன்னடா மாவட்டம், இயற்கை அழகு கொட்டி கிடக்கும் கடற்கரை மாவட்டமாகும். கார்வார், தான்டேலி, முருடேஸ்வரா உட்பட பல்வேறு கடற்கரைகள், நீர் வீழ்ச்சிகள், சுற்றுலா தலங்கள், துறைமுகங்கள், புராதன கோவில்கள் நிறைந்துள்ளன.உத்தரகன்னடா மாவட்டத்தில் பாயும் அற்புதமான ஆறுகளில், காளி ஆறும் ஒன்றாகும். தான்டேலி அருகில் அமைந்துள்ளது. இங்கு 1980ல் நீர் மின் உற்பத்தி திட்டம் துவங்கப்பட்டது. ஆற்றுப் பகுதி மனதை மயக்கும் சுற்றுலா தலமாக விளங்குகிறது.பேரிரைச்சலுடன் பள்ளத்தாக்கில் பாய்ந்தோடும் காளி ஆற்றை கண்டால், மெய் சிலிர்க்கும். சுற்றிலும் தென்படும் இயற்கை அழகை, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.கடந்த 1923ல் பிரிட்டிஷ் அதிகாரி சைக்ஸ் என்பவர், நில ஆய்வு மற்றும் ஆற்றை பார்வையிட வந்திருந்தார். இங்குள்ள பாறை மீது நின்று, ஹளியாலா மற்றும் எல்லாபுரா தாலுகா பகுதிகளை பார்வையிட்டார்.பள்ளத்தாக்கு வழியாக பாயும் 1,100 அடி ஆழமான காளி ஆற்றை கண்டு வியப்படைந்தார். இவர் வருகை தந்ததால் இந்த இடத்துக்கு 'சைக்ஸ் பாயின்ட்' என, பெயர் சூட்டப்பட்டது. இன்றைக்கும் அதே பெயரில் அழைக்கப்படுகிறது.சுதந்திரத்துக்கு முன், மைசூரின் ஜெயசாம ராஜேந்திர உடையாரும் காளி ஆற்றை பார்வையிட வந்திருந்தார். இங்குள்ள இயற்கை அழகில் மனதை பறி கொடுத்தார். அவரது வருகையின் நினைவாக, தான்டேலி அருகில் உள்ள அம்பிகா நகரின் மின்சார பவர் ஹவுசுக்கு, ஜெயசாம ராஜேந்திர உடையார் பாயின்ட் என்ற பெயர் வந்தது.அன்று பிரிட்டிஷ் அதிகாரிகள், சைக்ஸ் பாயின்டில் நின்று கீழே பார்த்த போது, பல விதமான வன விலங்குகள் சுதந்திரமாக நடமாடும் காட்சி தென்பட்டது. ஆனால், இங்கு நீர் மின் உற்பத்தி திட்டம் துவங்கிய பின், வன விலங்குகள் நடமாட்டம் குறைந்தது. காளி ஆற்றின் குறுக்கே பொம்மனள்ளி அணை கட்டப்பட்டது. இங்கு தேக்கப்படும் தண்ணீர், மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. 'சைக்ஸ் பாயின்ட்'டில் நின்று கீழே பார்த்தால், 1,100 ஆழத்தில் நாகஜரி பவர் ஹவுஸ் மற்றும் அடர்ந்த வனப்பகுதி நடுவே பாயும் காளி ஆறு தென்படும். கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை, பசுமையான இயற்கை காட்சிகள் புதிய அனுபவத்தை அளிக்கும்.காளி ஆற்று பள்ளத்தாக்கை, சுற்றுலா பயணியர் தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும். உத்தரகன்னடா மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணியருக்கு, காளி ஆற்றை பற்றி அவ்வளவாக தெரிவதில்லை. கடற்கரைகள், கோவில்களை பார்த்துவிட்டு செல்கின்றனர். காளி ஆற்றை பற்றி தெரிந்தவர்கள், இங்கு வர தவறுவது இல்லை.மற்ற இடங்களுக்கு செல்வதை போன்று, காளி ஆற்று பகுதிக்கு வர முடியாது. ஏன் என்றால் கர்நாடக மின்சார கார்ப்பரேஷனிடம் அனுமதி பெற வேண்டும். அம்பிகா நகரில் உள்ள கே.பி.சி., பாதுகாப்பு ஊழியர் அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும்.அங்கிருந்து 5 கி.மீ., சென்றால் கண்களுக்கு விருந்தளிக்கும் இயற்கை காட்சிகள் நிறைந்த காளி ஆற்று பகுதியை காணலாம். இங்கு அமைதியான சில மணி நேரம் அமர்ந்திருந்தால், மனம் லேசாகும். புதிதாய் பிறந்ததை போன்ற உணர்வு ஏற்படும். சாகச பிரியர்களுக்கு ஏற்ற இடமாகும்.எப்படி செல்வது?பெங்களூரில் இருந்து 458 கி.மீ., தொலைவிலும், மைசூரில் இருந்து 572 கி.மீ., தொலைவிலும் தான்டேலி அமைந்துள்ளது. அனைத்து நகரங்களில் இருந்தும் அரசு மற்றும் தனியார் பஸ் வசதி, ரயில் வசதி உள்ளது. வாடகை வாகனங்களும் இயக்கப்படுகின்றன. தங்குவதற்கும் ஏராளமான ரிசார்ட்டுகள் உள்ளன. காளி ஆற்றின் அருகிலேயே சூபா அணை உட்பட சில சுற்றுலா தலங்கள் உள்ளன. கூடுதல் தகவல் வேண்டுவோர் 073490 67470 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். - நமது நிருபர் -