மணிப்பாலில் ஓர் ரயில் பயணம்
ரயில் பயணம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. இந்த ரயில் பயணத்தின் சுவாரசியத்தை அதிகரிக்கும் வகையில், உடுப்பியில் உள்ள மணிப்பாலில் உள்ள ஸ்வர்ணா நதி மீது அமைந்துள்ள ரயில் பாலம் பயணம் செய்வதற்கும், பார்ப்பதற்கும் வியப்பை கூட்டுகிறது.கர்நாடகாவில் உள்ள கடலோர மாவட்டங்களில் ஒன்று உடுப்பி. உடுப்பியில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள மணிப்பால் நகரம். மணிப்பால் என்றால் பல்கலைக்கழகங்களின் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாகவும் கருதப்படுகிறது.இதற்கு காரணம் அங்கு நிலவும் வெப்பநிலையே. இந்த மணிப்பாலில் சுற்றுலாவுக்காக நிறைய இடங்கள் உள்ளன. இதில் ஸ்வர்ணா நதியின் மீது கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலம் ஒன்று உள்ளது.இந்த பாலத்தில் ரயில்கள் செல்லும்போது, அதை பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். பார்ப்பதற்கே அழகாய் இருக்கும்போது, அதில் பயணம் செய்தால் எப்படி இருக்கும் என யோசித்து பாருங்கள்.இந்த ரயில் பயணத்தின்போது, கீழே ஸ்வர்ணா நதி, சுற்றிலும் மரங்கள் என, ஒரு புது வித அனுபவத்தை கொடுக்கிறது. இந்த ரயில்வே பாலம் வழியாக பயணம் செய்வதற்கு யஷ்வந்த்பூரில் இருந்து புறப்படும் 16515 என்ற எண் கொண்ட ரயிலில், உடுப்பி ரயில் நிலையத்திற்கு ஒரு டிக்கெட் எடுக்க வேண்டும்.இந்த ரயிலில் பயணம் செய்வதன் மூலம் ஸ்வர்ணா நதி மீது கட்டப்பட்டு உள்ள ரயில்வே பாலத்தை பார்வையிடலாம். அதுமட்டுமின்றி, இந்த ரயில்வே பாலத்தில் பயணம் செய்வதை தாண்டி, இதை பார்வையிடுவதற்கும் பலர் வருகை தருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் புகைப்பட கலைஞர்களாக உள்ளனர். இவர்கள் வருவதற்கு காரணம், இந்த பாலத்தின் ரயில்கள் சென்று கொண்டிருக்கும்போது, பாலத்திற்கு பக்கவாட்டில் உள்ள சில பகுதிகளில் 10 பேருக்கு மேல் நின்று கொண்டு, ரயில் செல்வதை பார்க்கும் வகையில் பாலம் கட்டப்பட்டு உள்ளது.இது ஒரு புதுவிதமான அனுபவமாக இருக்கிறது. ஆனால், மழைக் காலங்களின்போது, இந்த ரயில் பாலங்களுக்கு செல்லும் போது கவனமாக செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எப்படி செல்வது?
ரயில்: பெங்களூரு கே.எஸ்.ஆர்., ரயில் நிலையத்தில் இருந்து, உடுப்பி ரயில் நிலையத்திற்கு செல்லவும். அங்கிருந்து, டாக்சி மூலம் ரயில்வே பாலத்தை அடையலாம்.பஸ்: மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் மூலம் 11 மணி நேரத்தில் உடுப்பி பஸ் நிலையத்திற்கு செல்லவும். அங்கிருந்து டாக்சி மூலம் இடத்தை அடையலாம். -நமது நிருபர்-