மேலும் செய்திகள்
நந்தி மலையில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்!
11-Apr-2025
பெங்களூரு மக்களை, சிக்கபல்லாபூரின் நந்தி மலை மட்டுமின்றி, கோலாரின் அந்தரகங்கே மலையும் வெகுவாக ஈர்க்கிறது. குறிப்பாக சாரணர்களுக்கு, மிகவும் பிடித்தமான இடமாகும். உள் நாடு, வெளி நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.கோடை விடுமுறை துவங்கிவிட்டது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சுற்றுலா செல்ல ஆர்வம் காட்டுகின்றனர். மலைப்பிரதேசங்களை தேடுகின்றனர். இவர்களின் உற்சாகத்துக்கு தீனி போடும் இடம் அந்தரகங்கே. பெங்களூருக்கு மிக அருகில் உள்ள, அற்புதமான சுற்றுலா தலமாகும். கண்களுக்கும், மனதுக்கும் இதமளிக்கும் இடமாகும்.பொதுவாக பெங்களூரு மக்கள், வார இறுதி நாட்களில் நகரின் அருகில் உள்ள, சிக்கபல்லாபூரின் நந்தி மலைக்கு செல்கின்றனர். நாள் முழுதும் நிம்மதியாக பொழுது போக்குகின்றனர். பெங்களூரை ஒட்டியுள்ள கோலாரிலும் இதேபோன்ற அற்புதமான அந்தரகங்கே மலை உள்ளது. சமீப நாட்களாக இங்கு வரும் சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.அந்தரகங்கே மலையில் காசி விஸ்வேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை தென்காசி என்றும் அழைக்கின்றனர். இங்குள்ள நந்தியின் வாயில் இருந்து கங்கை பொங்கி வழிவது, கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இதை காணவே பக்தர்கள், சுற்றுலா பயணியர் குவிகின்றனர்விஸ்வநாதரை தரிசித்துவிட்டு, நந்தியின் வாயில் இருந்து வழியும் கங்கை நீரை, தலையில் தெளித்து கொண்டு, மலையேற துவங்குகின்றனர். இந்த நீர் மருத்துவ குணம் கொண்டதாக நம்பப்படுகிறது. நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம். ஆண்டு முழுதும் தண்ணீர் விழுகிறது. கோடைக்காலத்திலும் தண்ணீரை காணலாம். எப்படி, எங்கிருந்து நீர் வருகிறது என்பது புரியாத புதிர்.இங்கு மலையேற சுற்றுலாத்துறை 250 ரூபாய் நிர்ணயித்துள்ளது. அந்தரகங்கே மலையில் இயற்கையாக உருவான குகைகளை காணலாம். மலை உச்சியில் நின்று பார்த்தால், கோலார் நகரின் அழகான தோற்றத்தை காணலாம். 350 முதல் 500 படிகளில் ஏற வேண்டும்.மலை பச்சை நிற பட்டுச்சேலையை போர்த்தியது போன்று, பசுமையாக தென்படுகிறது. அபூர்வமான மரங்கள், தாவரங்கள் நிறைந்துள்ளன. கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கிறது. அதிகாலையில் உடலை வருடி செல்லும் இளந்தென்றல், காதுகளில் பாயும் பறவைகளின் இனிமையான ரீங்காரம், சுற்றிலும் பசுமையான காட்சிகளை ரசித்தபடி, மலையேறுவது அற்புதமான அனுபவமாக இருக்கும்.மலை மீது நிலவும் அருமையான தட்பவெட்பம் மனதை உற்சாகப்படுத்தும். இங்கு சூர்ய உதயத்தை காண்பது, அபூர்வமான அனுபவமாகும்.கோடைக்காலத்தில் சுற்றுலா செல்லும் திட்டம் இருந்தால், சுற்றுலா பட்டியலில் அந்தரகங்கேவை சேர்த்து கொள்ளுங்கள். விடுமுறையை கொண்டாடுங்கள்.
பெங்களூரில் இருந்து 70 கி.மீ., கோலார் நகரில் இருந்து 4 கி.மீ., தொலைவில், அந்தரகங்கே அமைந்துள்ளது.பெங்களூரின் மெஜஸ்டிக்கில் இருந்து, கே.எஸ்.ஆர்.டி., பஸ்சில் பயணித்து, கோலாரில் இறங்க வேண்டும். இங்கிருந்து ஆட்டோவில் மலைக்கு செல்லலாம். தனியார் பஸ்களும் இயக்கப்படுகின்றன. ரயிலில் வந்தாலும் கோலாரில் இறங்க வேண்டும்.
சோமேஸ்வரர் கோவில், கோலாரம்மா கோவில், கோடி லிங்கேஸ்வரா, மார்க்கண்டேயர், தேரஹள்ளி. - நமது நிருபர் -
11-Apr-2025