உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா / சலிப்பு ஏற்படுத்தாத கலிபோர் இயற்கை முகாம்

சலிப்பு ஏற்படுத்தாத கலிபோர் இயற்கை முகாம்

பெங்களூரில் குடியிருக்கும் பலரும் கோடை விடுமுறையில் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருப்பர். இதில், சிலர் வெகுதுாரம் செல்ல விரும்பாமல், அருகிலுள்ள இடங்களுக்கு செல்ல திட்டமிடுவர். அவர்களுக்காகவே, காவிரி ஆற்றின் அருகில், அருமையாக அமைந்திருக்கும் இயற்கை முகாமுக்கு சென்று நேரத்தை செலவிடலாம்.பெங்களூரு ரூரல், கனகபுரா தாலுகா, உயம்பள்ளி என்ற இடத்தில் உள்ளது கலிபோர் இயற்கை முகாம். இது காவிரி வனவிலங்கு சரணாலயத்தின் இலையுதிர் காடுகளுக்கு நடுவே அமைந்துள்ள ஒரு இயற்கை முகாம். காவிரி ஆற்றின் கரைப்பகுதியில் அமைந்து உள்ளது.

பறவையினங்கள்

இங்கு புள்ளிமான், முதலை, ஆமை, பாம்பு, குரங்கு போன்றவற்றை நேரில் பார்த்து மகிழலாம். அதுமட்டுமின்றி, பச்சை கழுகு, மீன் கழுகு, மீன்கொத்தி, மரங்கொத்தி, ஆந்தைகள் போன்ற 230க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன.பெங்களூரு அருகில் உள்ள சிறந்த சுற்றுலா தலங்களில் இதுவும் ஒன்று. இந்த முகாம் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதால், நீங்கள் ஒவ்வொரு நிமிடமும் வனவிலங்குகள் எழுப்பும் சத்தங்களை கேட்டு மகிழலாம். இங்கு மீன் பிடிக்கவோ, பறவைகளை வேட்டையாடவோ அனுமதி இல்லை. ஆனால், படகு சவாரி உள்ளது. இந்த படகு சவாரியில், பயணித்து கொண்டே காவிரி ஆற்றின் அழகை ரசிக்க முடியும்.இங்கு வரும் சுற்றுலா பயணியருக்கு உதவி செய்ய, எப்போதும் ஊழியர்கள் பணியில் உள்ளனர். ஒரு நாளைக்கு மூன்று வேளையும் உணவு கிடைக்கிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில் ஆற்றங்கரை ஓரத்தில் நெருப்பு மூட்டப்பட்டு, சுற்றுலா பயணியர் ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்தி கொள்ளும் நிகழ்வு நடக்கும்.

கூடாரங்கள்

சுற்றுலா பயணியர் இரவில் தங்குவதற்கு பாதுகாப்பான கூடாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கூடாரங்களுக்கு வெளியில், ஒரு தொங்கும் படுக்கை அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு வருவோர் தங்குவதற்கு, உணவு, படகு சவாரி போன்ற அனைத்திற்கும் சேர்த்து, அவர்கள் தேர்வு செய்வதற்கு ஏற்றாற் போல், ஒரு நபருக்கு 5,000 ரூபாய் முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இங்கு ஆகஸ்ட் முதல் பிப்ரவரி வரை அட்டகாசமான சீசன் இருக்கும். கோடைக் காலங்களில் மதிய வேளையில் வெப்பம் அதிகமாக இருக்குமாம்.இங்கு வருவோர் தங்கள் செல்லப் பிராணிகளை அழைத்து வரக்கூடாது. சிகரெட், மது, பிளாஸ்டிக் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. சன் கிளாஸ், டார்ச், ஷூக்கள் போன்றவை கட்டாயம் எடுத்து செல்லவும்.

எப்படி செல்வது?

பஸ்: மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து சங்கம் சென்று, அங்கிருந்து, டாக்சி மூலம் கலிபோர் இயற்கை முகாமை அடையலாம். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ