குடும்பத்துடன் குதுாகலிக்க கொடிகே நீர்வீழ்ச்சி
இயற்கை அழகை, மழைக்காலம் மேலும் மெருகூட்டும். விண்ணில் இருந்து விழும் ஒவ்வொரு மழைத்துளியும், பூமியை அழகாக்குகின்றன. குறிப்பாக மலைப்பகுதிகளை, மழைக்காலத்தில் காண்பது அற்புதமாக இருக்கும். இத்தகைய இடங்கள் சுற்றுலா பயணியருக்கு பிடித்தமான இடமாகும்.கர்நாடகாவில் ஏராளமான மலைப்பகுதிகள் உள்ளன. சிக்கமகளூரும் மலைப்பகுதி மாவட்டமாகும். மழைக்காலம் துவங்கினால், சிக்கமகளூரில் நுாற்றுக்கணக்கான நீர்வீழ்ச்சிகளை காணலாம். கல்லத்திகிரி நீர்வீழ்ச்சி, ஜரி, சிரிமனே உட்பட, பிரபலமான நீர்வீழ்ச்சிகளை காணலாம். இந்த வரிசையில் கொடிகே நீர்வீழ்ச்சியும் ஒன்று. சிக்கமகளூரு, மூடிகெரே தாலுகாவின், துர்கதஹள்ளி அருகில் கொடிகே நீர்வீழ்ச்சி, சிறப்புத் தன்மை கொண்டது. சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கிறது. இது காபி தோட்டங்களின் நடுவே அமைந்துள்ளது. இது இரண்டு பாகமாக பிரிந்து பாய்கிறது. மற்ற நீர்வீழ்ச்சிகள் மிகவும் அபாயமானது. ஆழம் எவ்வளவு என்பது தெரியாது. எனவே இதில் இறங்கி விளையாட முடியாமல், சுற்றுலா பயணியர் ஏற்றத்துடன் திரும்புவர்.ஆனால் கொடிகே நீர்வீழ்ச்சி ஆழம் இல்லாதது. சிறார்கள், பெண்கள் இறங்கி நீரில் விளையாடி மகிழலாம். இதே காரணத்தால் பலரும் வார இறுதி நாட்களில், குடும்பத்துடன் வந்து பொழுதுபோக்க, தகுதியான இடமாகும். நீர்வீழ்ச்சிக்கு செல்ல காருக்கு 20 ரூபாயும், பைக்குகளுக்கு 10 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும்.வாகனங்களை நிறுத்திவிட்டு, 150 அடி துாரம் நடந்து சென்றால், கொடிகே நீர்வீழ்ச்சியை அடையலாம். பசுமையான காபி தோட்டங்கள், சுற்றிலும் கண்களுக்கு இனிமையான மரம், செடிகளை ரசித்தபடி, சில்லென உடலை வருடி செல்லும் குளிர்ந்த காற்றை அனுபவித்தபடி, நடந்து செல்வது அற்புதமான அனுபவமாக இருக்கும். இதை அனுபவிக்க வேண்டுமானால், கொடிகே நீர்வீழ்ச்சிக்கு செல்ல வேண்டும்.
எப்படி செல்வது?
சிக்கமகளூரில் இருந்து, 73 கி.மீ., மூடிகெரேவில் இருந்து 33 கி.மீ., தொலைவில் கொடிகே நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. பெங்களூரில் இருந்து 251 கி.மீ., மைசூரில் இருந்து 188 கி.மீ., துாரத்தில் மூடிகெரே உள்ளது. முக்கிய நகரங்களில் இருந்து, மூடிகெரேவுக்கு செல்ல கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ்கள், வாடகை வாகனங்கள் வசதியும் உள்ளது. அனுமதி நேரம்: காலை 8:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை. கட்டணம்: 30 ரூபாய் அருகில் உள்ள சுற்றுலா இடங்கள்: ராணி ஜரி, அம்பாதீர்த்தா, கியாதன மக்கி நீர்வீழ்ச்சிகள், கலசேஸ்வரர் கோவில். தொடர்பு எண்: 094490 63225, 080 - 2223 0060 - நமது நிருபர் -