உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா / மாவட்டங்களுக்கு இடையே கொட்டும் குன்சிகல் நீர்வீழ்ச்சி

மாவட்டங்களுக்கு இடையே கொட்டும் குன்சிகல் நீர்வீழ்ச்சி

ஷிவமொக்கா மற்றும் உடுப்பி மாவட்டங்கள் இடையே அடர்ந்த வனப்பகுதியில் 455 மீட்டர் உயரத்தில் கொட்டுகிறது, குன்சிகல் நீர்வீழ்ச்சி. ஷிவமொகா மாவட்டம், மாஸ்திகட்டே அருகில் நிடகோடு கிராமம் அமைந்துள்ளது. அதுபோன்று உடுப்பியில் இருந்து 77 கி.மீ., தொலைவில் இந்த கிராமம் உள்ளது. இங்குள்ள கும்பே பகுதியில் மிகவும் அழகான நீர்வீழ்ச்சி உள்ளது. பல மைல் துாரத்தில் இருந்து வரும் வராஹி நதி, 455 மீட்டர் உயரத்தில் இருந்து ஆர்ப்பரித்து அருவியாக கொட்டுகிறது. இந்த நீர்வீழ்ச்சி, உலகின் 116வது உயரமான நீர்வீழ்ச்சியாகும். அதுமட்டுமின்றி, இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சியாகவும் உள்ளது. ஹூலிகல் காட்டி கோவிலுக்கு அருகில் உள்ள பாறைகளில் இருந்து வராஹி நதி, கீழே விழுகிறது. இதன் பசுமையான இயற்கை அழகு மற்றும் காற்று சுற்றுலா பயணியரை மயக்கும். அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்து உள்ள நீர்வீழ்ச்சியை பார்க்க வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மாஸ்திகட்டே அருகே மணி அணையும், ஹூலிகல் அருகே நிலத்தடி மின் உற்பத்தி நிலையம் கட்டப்பட்ட பின், இந்த அருவியில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. அதுவே ஜூலை முதல் செப்டம்பர் மழைக் காலத்தில், நீர்வீழ்ச்சியில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டும். இந்த நீர்வீழ்ச்சி தடை செய்யப்பட்ட பகுதிக்குள் இருப்பதால் சுலபமாக யாராலும் உள்ளே செல்ல முடியாது. இந்த மலையில் இருந்து 15 கி.மீ., தொலைவில் ஹொசங்காடி கிராமம் அமைந்துள்ளது. இங்கு தான் நீர்வீழ்ச்சிக்கு செல்ல முறைப்படி அனுமதி 'பாஸ்' வாங்க வேண்டும். மழை காலத்தில் குன்சிகல் நீர்வீழ்ச்சியை காண ஏற்றதாகும். காலை 7:00 முதல் மாலை 5:00 மணி வரை நீர்வீழ்ச்சியை பார்த்து ரசிக்கலாம்.

எப்படி செல்வது?

 பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்வோர், ஷிவமொக்கா விமான நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து 97 கி.மீ., தொலைவில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்.  ரயிலில் செல்வோர், உடுப்பி ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து 97 கி.மீ., தொலைவில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்.  பஸ்சில் செல்வோர், ஷிவமொக்கா பஸ் நிலையம் சென்று, அங்கிருந்து தீர்த்தஹள்ளி பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து 36 கி.மீ., தொலைவில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு பஸ், டாக்சியில் செல்லலாம். - நமது நிருபர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை